இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:


வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி வீழ்ந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. 


பும்ரா கோகினூர் வைரம்


இந்நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் கோகினூர் வைரம் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு வேகப்பந்துவீச்சாளர். மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். அவர் இந்திய கிரிக்கெட்டில் மகுடம் சூடியவர். விராட் கோலியின் ரசிகர்கள் அவர் மீது குறை சொன்னார்கள். பலர் அவரைக் கடுமையாகத் திட்டினார்கள். கோலி உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் பும்ராவின் கருத்து கோலியின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.


பும்ரா ஒரு கோகினூர் வைரம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் கபில் தேவுக்கு பிறகு இவ்வளவு வெற்றிகரமானவர்களாக யாராவது வந்திருக்கிறார்களா? பும்ராவை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா. பும்ரா எப்படி சிறந்த வீரர் என்றால், மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டிப்பர் லாரி இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது.






மெர்சிடஸ் பென்ஸ் ஒரு ஓட்டுனரால் மிகவும் அழகாக இயக்கிக் கொண்டு சென்று விட முடியும். ஆனால் டிப்பர் லாரி வடக்கிலிருந்து தெற்காக மிகப்பெரிய பாரத்தை சுமந்து கொண்டு செல்கிறது. இப்படி செல்லக்கூடிய அந்த டிப்பர் லாரி பழுதடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படித்தான் பும்ரா தன் தோள்களில் மிகப்பெரிய சுமைகளை ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.


இதன் காரணமாக அவர் காயமும் அடைந்தார். ஆனாலும் அதிலிருந்து திரும்பி வந்து மீண்டும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். இதற்கான எல்லாப் பெருமையும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும்"என்று அஸ்வின் கூறியுள்ளார்.