இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:


அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. ஆனல், ரோஹித் ஷர்மா தலைமையிலான ஒரு நாள் அணி ஒயிட் வாஸ் முறையில் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.


வாய்ப்பு கிடைத்தால் தயாராக இருப்பேன்:


இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தனது தேர்வு குறித்து சர்ஃபராஸ் கான் பேசியுள்ளார். அதில், "எனக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தயாராக இருப்பேன். இதைத்தான் நான் எப்போதும் செய்து வருகிறேன், இதை மாற்ற எனக்கு எந்த காரணமும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.


 செப்டம்பர் 19 முதல் இந்தியா-வங்கதேசம் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் ஆறு இடங்களில் இடம் பெறுவார்கள். அடுத்து ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் , முகமது ஷமி இடம் பெறுவார்கள். பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருப்பதால் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.