இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இம்முறை மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சர்பராஸ் கான் அணியில் இடம் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
ஆண்டுதோறும் நடைபெறும் ரஞ்சி கோப்பை சீசனில் 900 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். நடப்பு ஆண்டிலும் ஐந்து முதல் தரப் போட்டிகளில் விளையாடி சர்பராஸ் கான் மூன்று சதம் அடித்தார். இதன்மூலம், முதல் தர போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் அதிக சராசரியுடன் சர்பராஸ் கான் இரண்டாவது இடத்திலும், பிராட்மேன் முதலிடத்தில் உள்ளனர்.
நௌஷாத் கான்:
நௌஷாத் கான் என்பவர் சர்ஃபராஸ் கானின் தந்தை ஆவார். இவரும் ஒரு கிரிக்கெட் வீரர். மேலும், சர்ஃபராஸ் கானுக்கு சிறு வயது முதலே பயிற்சி அளித்து வருகிறார். இந்தநிலையில், நௌசாத் கான் சமீபத்தில் சர்ஃபராஸ் கானின் இளமை பருவம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியானது நெஞ்சை வருடும்படி இருந்தது. அந்த பேட்டியில், “ சர்ஃபராஸ் கானும், அர்ஜூன் டெண்டுல்கரும் (சச்சின் டெண்டுல்கரின் மகன்) சிறு வயது முதலே ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் விளையாடுவதால் அர்ஜூனை, சர்ஃபராஸ் தினமும் சந்திப்பது வழக்கம்.
ஒருநாள் சர்ஃபராஸ் என்னிடம் வந்து “அப்பா, அர்ஜூன் டெண்டுல்கர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி? இந்த வயதிலேயே அவருக்கு கார், ஐபேட் என அனைத்தும் உள்ளது” என்று தெரிவித்தான்.
அப்போது ஒரு தந்தையாக நான் பட்ட தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னால் அந்த நேரத்தில் எதுவும் பேச முடியவில்லை.
அதை தொடர்ந்து சர்ஃபராஸ் என்னை இறுக்கமாக அணைத்து கொண்டான். கட்டி அணைத்தபடியே, ” அர்ஜூனை விட நான்தான் அப்பா அதிர்ஷ்டசாலி, ஏன் தெரியுமா? என் தந்தை எப்போதும் என்னுடனே இருக்கிறார். ஆனால், அர்ஜூனின் தந்தை சச்சின், அவருடன் நிறைய நேரம் செலவிடவில்லை.” என தெரிவித்தார்.
அப்படி சர்ஃபராஸ் கான் அந்த சிறுவயதில் கூறியது இன்னும் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று என்று சர்ஃபராஸ் கானின் தந்தை நௌசாத் கான் தெரிவித்தார்.
80+ சராசரியாக டீம் இந்தியாவில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை:
சர்பராஸ் கான் இதுவரை 37 முதல் தர போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் 3400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இங்கு அவரது பேட்டிங்கில் 82.86 சராசரியுடன் மொத்தம் 13 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். இதில், ஒரு டிரிபிள் சதமும் அடங்கும். இவ்வளவு அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகும், சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. முதல் தர கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் தொடர்ந்து பேட் அடித்து வருகிறார். அவர் தேர்வு செய்யப்படாததால், கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.