Bumrah:  காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘’குட் டைம்ஸ் அஹெட்’’ என பதிவிட்டுள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் பும்ராவுக்கு காலில் ஏற்பட்ட  காயத்தால், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியில் முகமது ஷமி இடம் பெற்றார். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரை இறுதிச் சுற்றுடன் வெளியேறியது. இதனால் இந்திய அணி பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அப்போது பலரும் பும்ரா இல்லாத இந்திய அணி அரை இறுதி வரை வந்ததே பெரிய விஷயம் என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தனர். 


உலகக் கோப்பைக்குப் பிறகு, 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது. முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டு களம்  இறக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு டி20யில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடரில் ஷிகர் தவானும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டனர். 






நியூசிலாந்து தொடருக்குப் பிறகு பங்களாதேஷ் உடனான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி பங்களாதேஷ் செல்லவுள்ளது. வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது. இந்த தொடரிலேயே பும்ரா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முழுமையாக குணமாகாததால், அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இருப்பதால் பும்ரா அணிக்கு விரைந்து திரும்புவது மிகவும் அவசியம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். 


இதற்கெல்லாம், பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு உள்ளது. அதில் அவர் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கேப்ஷனாக, “குட் டைம்ஸ் அஹெட்” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது இந்த பதிவுக்கு ”கம் பேக்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.