டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேபாள அணி குரூப் டி யில் விளையாடி வருகிறது. அதன்படி, 1 போட்டியில் விளையாடியுள்ள அந்த அணி தோல்வியை தழுவி நான்காவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் நேபாள அணியின் முக்கிய வீரரான சந்தீப் லாமிச்சானே விளையாடவில்லை.
அதற்கான காரணம் அவர் பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்புடையாவர் என்று அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது தான். அதாவது, சந்தீப் லாமிச்சானே கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர், சந்தீப் லாமிச்சானே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப் லாமிச்சானே வங்கிக் கணக்கு சீல் வைக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசா வழங்காத அமெரிக்கா:
இதனிடையே நேபாள மாவட்ட நீதிமன்றம் இவரை குற்றவாளி என்று அறிவித்து சிறைத் தண்டனை விதித்த நிலையில் படான் உயர்நீதிமன்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தீப்பை குற்றவாளி இல்லை என்று கூறி இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனாலும் அவர் பாலியல் வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டதால் அவருக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா.
வெஸ்ட் இண்டீஸில் விளையாடும் சந்தீப் லாமிச்சானே:
இந்நிலையில் தான் நேபாள அணி விளையாடும் கடைசி இரண்டு லீக் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சந்தீப் லாமிச்சானே விளையாடுவார் என்று நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேபாள அரசிற்கு சந்தீப் லாமிச்சானே நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”நமஸ்தே, வெஸ்ட் இண்டீஸில் இருந்து வணக்கம்! முதலில், நேபாள அரசு, வெளியுறவு அமைச்சகம், விளையாட்டு அமைச்சகம், தேசிய விளையாட்டு கவுன்சில் (NSC), மற்றும் நேபாள கிரிக்கெட் சங்கம் (CAN) ஆகியவற்றின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அமெரிக்க விசாவைப் பெற எனக்கு உதவ நீங்கள் உதவியதற்கு நன்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அது பலனளிக்கவில்லை, ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நான் இப்போது வெஸ்ட் இண்டீஸில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான தேசிய அணியில் இணைகிறேன். இது அனைத்து கிரிக்கெட் பிரியர்களின் கனவு." என்று கூறியுள்ளார் சந்தீப் லாமிச்சானே.