இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனி வியாட், தனது நீண்ட கால காதலியான ஜார்ஜி ஹார்ஜை நேற்று (ஜூன் 10ம் தேதி) இங்கிலாந்தின் லண்டனின் உள்ள செல்சியா ஓல்ட் டவுன் ஹாலில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019ம் ஆண்டு முதல் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 


இதுகுறித்து வியாட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த திருமண புகைப்படத்தில், இருவரும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தம்பதிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 






வியாட் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ஜார்ஜி ஹாட்ஜ். ஹாட்ஜ் கால்பந்து அணியின் மேலாளராக இருந்து வருகிறார். 


2014ல் விராட் கோலிக்கு ப்ரோபோஸ் செய்த வியாட்: 


இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீராங்கனை டேனி வியாட், கடந்த 2014ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சமூக வலைதளங்களில் ப்ரோபோஸ் செய்தார். அதன்பிறகு, விளையாட்டுக்காக அப்படி தெரிவித்தேன் என்று குறிப்பிட்டார். அதன்பிறகே, கடந்த 2017ம் ஆண்டு விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார். அப்போதிலிருந்து, டேனி கிரிக்கெட் உலகில் பரிச்சயமான முகமாகிவிட்டார். 


மேலும், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் டேனி வியாட்டுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் பலமுறை உணவகங்களில் ஒன்றாகக் காணப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. 


பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டம்:


டேனி வியாட் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணிக்காக விளையாடினார். கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய டேனி வியாட் 48 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து தனது அணிக்கு 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தார்.


அதேபோல், கடந்த மே 29 ஆம் தேதி செம்ஸ்ஃபோர்டில் நடந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில், டேனி வியாட் 44 ரன்கள் எடுத்து தனது அணி தொடரை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.


டேனி வியாட்டின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


டேனி வியாட் இங்கிலாந்து அணிக்காக இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 129 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இங்கிலாந்துக்காக 110 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1907 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். மேலும், வியாட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 156 டி20 போட்டிகளில் 2726 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இரண்டு சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும். 


இங்கிலாந்து அணிக்காக டேனி வியாட் கடந்த 2010ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.