இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் போல், அமெரிக்காவில் தற்போது எம்.எல்.சி (மேஜர் லீக் கிரிக்கெட்) என்ற கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் இந்த தொடரிலும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்.ஐ நியூயார்க் என்ற பெயரில் அணிகள் விளையாடி வருகின்றனர்.
இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் அமெரிக்காவில் கோலகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டனர். இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது.
இரண்டாவது லீக் போட்டி
இன்று எம்.ஐ நியூயார்க்கிற்கும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்க்கும் போட்டி நடைப்பெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் மற்றும் மேத்யூ வேட் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. பின்னர் வந்தவர்களும் வந்த வேகத்திற்கு பெவிலியன் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 7 ஓவருக்கு 50 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது சான் பிரான்சிஸ்கோ.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோரி ஆண்டர்சன்
பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன், சதாப் கான் அணியின் நிலைமையை புரிந்துகொண்டு நிதானமாக ஆட தொடங்கினர். அரம்பத்தில் நிதானமாக ஆடி வந்த இருவரும் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதாப் கான் 30 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து சிக்ஸர், நான்கு பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்டிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆனால் கோரி ஆண்டர்சன் அதிரடி ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்களுக்கு எடுத்தது சான் பிரான்சிஸ்கோ . அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 52 பந்துகளில் 7 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் மொத்தம் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆரம்பமே ஆடிப்போன எம்.ஐ
இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய எம்.ஐ நியூயார்க் அணி தொடக்கமே சரிவை சந்திக்க நேரிட்டது. தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவன் டெய்லர் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சைதன்ய பிஷ்னோய்விடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த மோனாங்க் படேலும் 8 ரன்களுக்கு திரும்பி அனுப்பபட்டார். பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.
அதிரடியாக அடியும் அணிக்கு வெற்றி கிட்டவில்லை
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் மற்றும் டிம் டேவிட் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஒருபக்கம் டிம் டேவிட் அரைசதம் விளாச மறுப்பக்கம் கெய்ரன் பொல்லார்ட் உறுதுணையாக நின்றார். ஆனால் இருவரின் அதிரடியான ஆட்டம் அணிக்கு வெற்றியை தேடித் தரவில்லை. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது எம்.ஐ நியூயார்க். இதன் மூலம் தனது முதல் போட்டியிலே முதல் வெற்றியை பதிவு செய்தது சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்.