கிரிக்கெட்டின் கடவுளான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர்தான். இந்த காலத்தில் எப்படி தோனி களத்தில் இருந்தால் தங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போமோ, அதேபோல், சச்சின் டெண்டுல்கர் களத்தில் இருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெற்று விடும் என்று நம்பியர்வர்கள் ஏராளம். அதில் தோனியும் ஒருவர் என்றால் மறுக்க முடியுமா? அதை ஒவ்வொரு போட்டியிலும் சச்சின் டெண்டுல்கர் நிரூபணம் செய்து கொண்டே இருந்தார். சச்சின் கிரீசுக்குள் இருக்கும் வரை இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல என்பது ஒவ்வொரு எதிரணி பந்துவீச்சாளர்களுக்கும் தெரியும்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்திய பிறகு, ஒட்டுமொத்த இந்தியாவும் கடந்த 2008ம் ஆண்டு சச்சின், ஐபிஎல்லில் எந்த அணிக்காக விளையாடுவார் என்று உற்றுநோக்கியது. ஐபிஎல் முதல் சீசனான 2008ல் இதன் தலைவராக பதவி வகித்தவர் லலித் மோடி.
சச்சினை ஏலத்தில் விட வேண்டாம் என்று சொல்லிய லலித் மோடி:
தற்போது வரை ஐபிஎல்லில் ஒவ்வொரு வீரரும் ஏலம் விடப்பட்டே அணியில் எடுக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் தங்களுக்காக விருப்பமான வீரரை ஃப்ரான்சைஸ்கள் (அணி நிர்வாகம்) கடும் போட்டியிட்டு ஏலத்தில் எடுப்பார்கள். இப்படி இருக்க 2008ல் ஐபிஎல் தொடங்கும் முன்பே, ஐபிஎல் தலைவர் லலித் மோடி மற்றும் பிசிசிஐ மனதில் ஒருவிதமான பயம் இருந்தது. அதற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர்தான்.
கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் மற்றும் புகழ்பெற்ற வீரர்கள் ஒரு சிலரை எந்த அணி எப்படி ஏலம் எடுப்பார்கள் என்ற அச்சம் நிலவியது. இவர்களின் ஏலம் கிரிக்கெட்டை மதமாகவும், ஜாதியாகவும் பார்க்கும் ரசிகர்கள், தங்கள் சொந்த மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மற்றொரு மாநிலத்தை சேர்ந்த அணியில் விளையாடுவதை ஏற்றுகொள்வார்களா என்ற அச்சம் அனைவரது மனதிலும் ஓடியது. அப்போதே சச்சின், மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கினர்.
தீர்க்கமான முடிவெடுத்த லலித் மோடி:
ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி, பிசிசிஐயிடம் சச்சின் உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை ஏலத்திற்கு அனுப்பக் கூடாது என்று பரிந்துரை செய்தார். இதற்கு பிசிசிஐ அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, ஐபிஎல்லில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 முக்கிய வீரர்கள் மார்க்யூ வீரர்களாக ஆக்கப்பட்டனர். அந்த 5 முக்கிய வீரர்கள் சச்சின், சவுரவ் சங்குலி, வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட் மற்றும் யுவராஜ் சிங்.
அதன் அடிப்படையில், சச்சினை மும்பை இந்தியன்ஸ் அணியும், கங்குலியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சேவாக்கை டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் (டெல்லி கேபிடல்ஸ்), டிராவிட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், யுவராஜை கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( பஞ்சாப் கிங்ஸ்) அணியும் ஒப்பந்தம் செய்தனர். அதே நேரத்தில் மகேந்திர சிங் தோனி உட்பட மற்ற வீரர்கள் ஏலத்திற்கு சென்றனர்.
கிட்டத்தட்ட 5 கோடிக்கு சச்சினை வாங்கிய மும்பை:
சச்சி டெண்டுல்கரை முதல் சீசனிலேயே மும்பை ஒப்பந்தம் செய்தது. இதற்காக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினை ஒரு சீசனுக்கான கட்டணமாக ரூ.4 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்தை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் (அம்பானி குடும்பம்) வழங்கியது. 2010 சீசன் வரை சச்சினின் கட்டணம் அப்படியே இருந்தது. இதனை தொடர்ந்து, சச்சினின் கட்டணம் ரூ.8 கோடியே 28 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற பிறகு, ஐபிஎல்லில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். சச்சின் ஐபிஎல்லில் மும்பை அணிக்காக மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுவாரியாக மும்பை அணி சச்சினுக்கு வழங்கிய சம்பளம்:
- 2013 - 82,800,000
- 2012 - 82,800,000
- 2011 - 82,800,000
- 2010 - 44,850,000
- 2009 - 44,850,000
- 2008 - 44,850,000
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெற்ற மொத்த சம்பளம் - 382,950,000
தொடர்ந்து, மகேந்திர சிங் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் 6 கோடிக்கு ஏலம் எடுத்தது. முதல் சீசனில் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட முதல் வீரர் தோனி மட்டும்தான். முதல் சீசனில், ஏலத்தில் அனைத்து வீரர்களையும் வாங்க ஒவ்வொரு உரிமையாளரும் மொத்தம் ரூ.20 கோடி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.