கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51வது பிறந்த நாள் ஆகும். கிரிக்கெட்டில் அதிக ரன்கள், டெஸ்டில் அதிக சதங்கள் என யாருமே நெருங்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். அவரைப் பற்றி அறியாத சில விஷயங்களை கீழே விரிவாக காணலாம்.
- உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் முதன்முதலில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அவரை புகழ்பெற்ற பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி நிராகரித்துவிட்டார்.
- 1987ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் பால் பாயாக சச்சின் இருந்தார். பின்னாளில், இதே மைதானத்தில் பல சதங்களையும், உலகக்கோப்பையையும் கையில் ஏந்தினார்.
- 1988ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மாற்று வீரராக ஃபீல்டிங் செய்துள்ளார்.
- சிறு வயதில் வலைபயிற்சியில் அவுட்டே ஆகாமல் இருந்து தனது பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகரிடம் நாணயங்களை பரிசாக பெறுவாராம் சச்சின். அதுபோல அவர் 13 நாணயங்களை தனது பயிற்சியாளரிடம் பெற்றாராம்.
- 1995ம் ஆண்டிலே சச்சின் டெண்டுல்கர் உலகின் பணக்கார கிரிக்கெட்டராக உலா வந்தவர். வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் அப்போதே 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 31.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார்.
- சச்சின் டெண்டுல்கர் தனது சிறு வயதில் தூங்கும்போது பேட்டுடன் தூங்குவார்.
- சச்சின் டெண்டுல்கர் முதன் முதலில் வாங்கிய கார் மாருதி 800.
- சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது அம்பயரால் முதன் முதலில் அவுட்டானவர் சச்சின் டெண்டுல்கர். 1992ம் ஆண்டு டர்பனில் நடந்த 2வது டெஸ்டில் ஜான்டி ரோட்சால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
- இந்திய ஆடவர் அணிக்காக மிக இளம் வயதிலே கிரிக்கெட் ஆடிய பெருமை கொண்டவர்.
- சச்சினின் அறிமுக டெஸ்டில் அவரது பேட் வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஆலன் முல்லே புகார் அளித்தார்.
- இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி, துலீப் மற்றும் இரானி கோப்பை போட்டிகளின் அறிமுக போட்டியிலே சச்சின் சதம் அடித்தே தனது பயணத்தை தொடங்கினார்.
- ரோஜா படம் பார்ப்பதற்காக 1995ம் ஆண்டு சச்சின் திரையரங்கம் சென்றபோது ரசிகர்கள் கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சச்சின் மிகப்பெரிய உணவுப்பிரியர். குறிப்பாக வட பாவ் விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
- புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் பீட் சாம்ப்ராஸ், போரீஸ் பெக்கர், கால்பந்து பிரபலம் டியாகோ மாரடோனா ஆகியோரின் பரம ரசிகர் டெண்டுல்கர்.
- புகழ்பெற்ற இசை கலைஞர் சச்சின் தேவ் பர்மனின் பெரிய ரசிகரான டெண்டுல்கரின் தந்தை, அவரது நினைவாக டெண்டுல்கருக்கு சச்சின் என்று பெயர் வைத்தார்.