’கிரிக்கெட் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளை மழைபோல் குவித்து வருகின்றனர். இந்தநிலையில், சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிறப்பு பரிசு ஒன்றை அவருக்கு அளித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயிலுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சூட்டியுள்ளது. இந்த கேட் இன்று (ஏப்ரல் 24) திறக்கப்பட்டது. இதில், சச்சினுடன் பிரையன் லாராவும் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நுழைவாயிலை திறக்கும்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி இதுகுறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று கிரிக்கெட் உலகம் சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு சிறந்த ஆளுமைகளான சச்சின் மற்றும் பிரையன் லாராவின் அசாதாரண சாதனைகளை கௌரவிக்க இது சரியான நேரம். இவர்கள் இருவரின் சாதனைகளும் வருகை தரும் அணிகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி இந்த மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வீரரையும் தலைமுறை தலைமுறையாக ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சச்சின் டெண்டுல்கர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கு அவரது பேட்டிங் சராசரி 157. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் மூன்று சதங்களுடன் மொத்தம் 785 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரட்டை சதமும் அடங்கும். ஜனவரி 2004 இல், சச்சின் ஆட்டமிழக்காமல் 241 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், பிரையன் லாரா தனது வாழ்க்கையில் முதல் சதத்தை இந்த மைதானத்தில் அடித்தார். ஜனவரி 1993 இல் நடந்த டெஸ்ட் போட்டியில், லாரா 277 ரன்கள் எடுத்தார். இந்த மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் இந்த பதிவுகள் காரணமாக, கேட் 'பிரையன் லாரா-சச்சின் டெண்டுல்கர் கேட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
இந்த சிறப்பு பரிசு குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “ இந்தியாவுக்கு வெளியே எனக்கு மிகவும் பிடித்த மைதானம் சிட்னி கிரிக்கெட் மைதானம்தான். கடந்த 1991-92 ம் ஆண்டு எனது முதல் ஆஸ்திரேலிய பயணம், இந்த மைதானத்தில் இருந்து தொடங்கியது. இந்த மைதானத்தில் எனக்கு பல நினைவுகள் இருக்கிறது. சிட்னியில் வருகை தரும் வீரர்களின் மைதானத்துக்கான நுழைவு வாயிலுக்கு என் மற்றும் எனது சிறப்பு நண்பர் பிரையன் பெயர் சூட்டப்பட்டது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.” என தெரிவித்தார்.