இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட் வரலாற்றை எழுத வேண்டுமென்றால் சச்சினை தவிர்த்து எழுத முடியாது. ஏனெ்னறால் அவர் ஒரு சகாப்தம். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் அவர் ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகளை கடந்த பிறகும் அவர் வசமே உள்ளது.
சச்சின் 50வது பிறந்தநாள்:
டெஸ்ட், ஒருநாள், டி20, ஐ.பி.எல்., உள்ளூர் போட்டிகள், இங்கிலாந்து கவுண்டி கிளப் கிரிக்கெட் என்று அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடியுள்ளார். அப்பேற்பட்ட மகத்தான சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள் இன்று ஆகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவித்தது. உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக சிட்னி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வீரர்கள் மைதானத்திற்கு செல்வதற்கு உள்ள ஒரு பகுதியில் சிறிய அளவிலான கம்புகளால் செய்யப்பட்ட நுழைவுவாயில் (கேட்) அமைக்கப்பட்டுள்ளது.
கவுரவப்படுத்திய ஆஸ்திரேலியா:
சச்சினின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த கேட்டிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தின் கேட்டில் சச்சினின் பெயரை சூட்டுவதற்கு காரணம் அவர் அந்த மைதானத்தில் அளப்பரிய பல சாதனைகளை படைத்ததே ஆகும். ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் சச்சின் டெண்டுல்கர் ஆதிக்கம் செலுத்தும் வீரராகவே உலா வந்துள்ளார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் உள்பட 785 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 2004ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 241 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்து அசத்தினார். சிட்னி மைதானத்தில் மட்டும் தன்னுடைய பேட்டிங் சராசரியாக 157 வைத்துள்ளார்.
சிட்னி மைதானம் பற்றி சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை குறிப்பிடும்போது, இந்தியாவிற்கு வெளியே எனக்கு மிகவும் பிடித்த மைதானம் சிட்னி மைதானம் ஆகும். ஆஸ்திரேலியாவிற்கு முதன்முறையாக 1991-92ம் ஆண்டு வந்தபோது எனக்கு சிட்னி தைானத்தில் சில சிறந்த நினைவுகள் உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சாதனைகள்:
சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கேட் வழியாக கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் களமிறங்க முடியும். இதேபோல கிரிக்கெட் வீரர்கள் மற்றொரு மைதானத்திற்குள் களமிறங்க மற்றொரு கேட்டும் உள்ளது. அந்த கேட்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவனான லாரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே சிட்னி மைதானத்தில் லாரா ஒரே இன்னிங்சில் 277 ரன்கள விளாசியிருந்தார். இந்த இரண்டு கேட் வழியாக மட்டும்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் களமிறங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மண்ணில் மிக இள வயதில் டெஸ்ட் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1809 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 சதங்களும், 1 இரட்டை சதங்களும் அடங்கும். மொத்தமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 11 சதங்கள், 16 அரைசதங்களுடன் 3630 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3077 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 9 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 175 ரன்களை விளாசியுள்ளார்.