கடந்த காலமாக இருந்தாலும் சரி.. எதிர்காலமாக இருந்தாலும் சரி.. இனி சச்சினை போல் ஒருவர் பிறக்கப்போவதும் இல்லை.. வர போவதும் இல்லை.. ஏனெனில், இந்த உலகத்தில் சச்சினுக்கு நிகர் சச்சின் மட்டுமே!
கிரிக்கெட் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சச்சின் டெண்டுல்கர்தான். பல கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள், செல்வார்கள்.. பல கிரிக்கெட் வீரர்கள் சச்சினுடன் ஒப்பிடப்பட்டார்... இன்றளவும் ஒப்பிடப்பட்டும் வருகிறார்கள்..
ஆனால், சச்சின் என்ற சூரியன் ஒருமுறை மட்டுமே இந்த உலகத்தில் உதிக்கும். சச்சினை பற்றி பலரும் அறியாத கதை தெரிந்து கொள்வோம்.. அவரை போல் இருப்பது கடினம் மட்டுமல்ல, முடியாவே முடியாது.
சச்சினின் புள்ளி விவரங்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்கள் விளையாடி 100 சதங்கள் உள்பட 33,357 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலமே இவரது கிரிக்கெட் பயணம் எத்தகைய கடினம் என்று அனைவருக்கும் தெரிந்துவிடும். பல வீரர்கள் இவரது இந்த ரன் எவரெஸ்ட்டை ஏற முயற்சித்து, பாதி வழியில் மூச்சு திணறி இறங்கியுள்ளனர். சிலர் அவர் அருகில் நெருங்கியும் கூட தொட முடியவில்லை. தற்போது இவர் அருகில் யாருமே இல்லை.
கைகளில் புரண்ட கோடிகள்:
உலகில் சச்சினுக்கு முன்னதாக டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் சச்சின் என்ற பிரபலத்தின் கையில்தான் கோடிகள் புரண்டது. பல மில்லியன் டாலர் பிராண்ட் ஒப்பந்தத்தை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றார். இவர் முதன்முதலில் வேர்ல்ட் டெல்லில் கடந்த 1995ம் ஆண்டு கையெழுத்தினார். அதன்பின், கடந்த 2001ம் ஆண்டு 800 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம், 100 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்குப் பிறகுதான், கிரிக்கெட் வீரர்களும் பிராண்டுகளாக மாறினர். சச்சின் திறந்து வைத்த பாதையில் தற்போது தோனி, கோலி, ரோகித் சர்மா என கோடீஸ்வர வீரர்களின் பட்டாளமே பின் செல்கிறது. ஓய்வுக்குப் பிறகும் சச்சினின் சொத்து மதிப்பு ரூ.1450 கோடி என கூறப்படுகிறது.
சச்சின் அவுட் - டிவி ஆஃப்:
ஒரு காலத்தில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையின் ஒரே பெயர் சச்சின். அப்போதே சச்சின் ஒன் மேன் ஆர்மியாக திகழ்ந்தார். 90 கால கட்டத்தில் சச்சின் கிரீஸில் இருக்கும் வரை டீம் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சச்சின் அவுட் ஆனவுடன் டிவி ஆப் செய்யப்பட்ட கதை பலமுறை கேள்வி பட்டிருக்கிறோம். தற்போதும் சச்சின் இல்லாத போட்டியை காணாத ரசிகர்கள் ஏராளம்.
பல கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாரணம்:
2000திற்கு முன்பில் இருந்து இந்திய இளைஞர்களின் முன் உதாரணமாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவரை பார்த்துதான் பலபேர் கிரிக்கெட் விளையாடவே ஆர்வம் காட்டினர். சச்சினின் பேட்டிங்கைப் பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவோடு பேட்டை எடுத்தனர். அவர்களில் இந்திய அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற கேப்டன் மகேந்திர சிங் தோனி, அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள். இந்த வீரர்கள் பல பேட்டிகளில் சச்சின் தான் கிரிக்கெட் விளையாட உத்வேகம் அளித்ததாக கூறியுள்ளனர்.
டான் பிராட்மேனுக்கு பிடித்த வீரர்:
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99.96 சராசரியுடன் 29 சதங்கள் உள்பட 6996 ரன்கள் எடுத்துள்ளார். ஒருமுறை சச்சினின் பேட்டிங்கைப் பார்த்த டான் பிராட்மேன், இந்தப் பையனும் என்னைப் போலவே பேட் செய்கிறான் என்று கூறினார். இதன்பிறகு சச்சின் டெண்டுல்கரையும் தனது பிறந்தநாளுக்கு அழைத்தார் பிராட்மேன்.
சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட் வாழ்க்கை ஒரு பார்வை:
கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் இன்று அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இன்று அவருக்கு 50 வயதாகிறது. சச்சின் 1989 நவம்பர் 15 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஓய்வு பெற்றார். அவர் தனக்கு பிடித்த கிரிக்கெட்டை 24 ஆண்டுகள் மற்றும் 1 நாள் வரை விளையாடியுள்ளார். மொத்தம் 664 போட்டிகளில் விளையாடி 34357 ரன்கள் எடுத்துள்ளார்.