ODI WC 2023 Srilanka Team: உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் விவரங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே, தசுன் ஷனகா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சாம்பியனான அந்த அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இலங்கை அணி விவரங்கள்:
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் பத்திரகே, கசுன் பத்திரஜித குமார, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி பலம்:
உலகக்கோப்பை தொடரில் போட்டியின் போக்கையே மாற்றும் திறமை வாய்ந்த, சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருப்பது இலங்கையின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மகேஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உலகக்கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மைதானங்களின் தன்மை இலங்கையை போன்று தான் இருக்கும் என்பது, அவர்களுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
இலங்கை அணி பலவீனங்கள்:
நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாதது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் பதீரனா உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பேட்டிங்கிலும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. இலங்கையின் 15 பேர் கொண்ட அணியில் 11 வீரர்கள் உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக விளையாட உள்ளனர். கேப்டன் தசுன் ஷனக்காவிற்கும் இதுவே முதல் உலகக் கோப்பையாகும். போதிய அனுபவம் இல்லாத இலங்கை அணி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிகளை வீழ்த்துவது சிரமம் தான்.
இலங்கை அணி போட்டி விவரங்கள்:
தேதி | போட்டி விவரங்கள் | மைதானம் |
அக்டோபர் 7 | இலங்கை - தென்னாப்ரிக்கா | டெல்லி |
அக்டோபர் 10 | இலங்கை - பாகிஸ்தான் | ஐதராபாத் |
அக்டோபர் 16 | இலங்கை - ஆஸ்திரேலியா | லக்னோ |
அக்டோபர் 21 | இலங்கை - நெதர்லாந்து | லக்னோ |
அக்டோபர் 26 | இலங்கை - இங்கிலாந்து | பெங்களூரு |
அக்டோபர் 30 | இலங்கை - ஆப்கானிஸ்தான் | புனே |
நவம்பர் 2 | இலங்கை - இந்தியா | மும்பை |
நவம்பர் 6 | இலங்கை - வங்கதேசம் | டெல்லி |
நவம்பர் 9 | இலங்கை - நியூசிலாந்து | பெங்களூரு |
உலகக் கோப்பையில் இலங்கை:
1996ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியையே காணாமல், ரணதுங்காவின் தலைமையில் இலங்கை அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 2014 டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து, ஐசிசியின் எந்தவொரு தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கும் இலங்கை அணி தகுதி பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.