சச்சின்.... இது பெயரா? அல்லது இதற்கு அர்த்தம் இந்திய கிரிக்கெட் அணி என்பதா? எனும் அளவிற்கு சச்சினின் கிரிக்கெட் ஆட்டம் அவ்வளவு பலமாக இருந்தது. எந்த பந்து போடுவது என எதிரணி வீரர்களே குழம்பிப்போகும் அளவிற்கு நாலாபுறமும் பந்தை அடித்து விளாசும் வீராராக அவர் திகழ்ந்தார். அப்படிப்பட்ட சச்சினின் முதல் சதம் பற்றி நாம் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கடவுள் என அழைக்கபடும் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் தனது முதல் சதத்தினை, 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்தார். அவரின் அந்த முதல் சதம் தான் அவருக்கான முதல் ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றுத் தந்தது. 1990ல் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த சச்சின் தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டை உலகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மாற்றப்போகிறார் என அப்போது யாரும் கணித்திருக்க கூட மாட்டார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சச்சினுக்கு இருந்தது பெரும் நெருக்கடி, 408 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி எப்படியாவது போட்டியை சமன் செய்து விடவேண்டும் என்ற முனைப்பில் விளையாடிக் கொண்டிருந்தது. மிகவும் நெருக்கடியில் ஆடவந்த சச்சினின் ஆட்டத்தில் இருந்த நிதானம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக கிடைத்த பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விளாசி வந்த சச்சின், தனது முதல் சதத்தினை பதிவு செய்தது மட்டுமில்லாமல், இந்தியாவினை அந்த போட்டியில் தோல்வியில் இருந்து காப்பாற்ற தனது பங்கினை மிகவும் சிறப்பாகச் செய்தார்.
இந்த சதம் குறித்து சச்சின் கூறியிருந்ததாவது, “என்னுடைய முதல் சதம், இங்கிலாந்தின் ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில், இங்கிலாந்துடனான தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது அடிக்கப்பட்டது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், நான் 68 ரன்கள் எடுத்திருந்தேன். முதல் இன்னிங்ஸில் கடைசியாக ஆட்டமிழந்ததும் நான்தான். இரண்டாவது இன்னிங்ஸில் நான் பேட்டிங் செய்ய வரும்போது, நான் ஆறாவது விக்கெட்டிற்கு களமிறங்கினேன். ஏற்கனவே முக்கியமான சில விக்கெட்களை இழந்திருந்தோம். ஆனால், நாங்கள் பல ஓவர்களை விளையாட வேண்டி இருந்தது. அதனால், பல ஓவர்களில் நான் மெதுவாகவும் நிதானமாகவும் விளையாடினேன். சில பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தினேன். அதுமட்டுமில்லாமல், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் ஆட்ட நாயகன் விருது அந்த போட்டியில் தான் என்பதும் மறக்க முடியாதது” என்று சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதம் குறித்து நினைவு கூர்ந்தார்.
மேலும், “எனது முதல் சதம் மிகவும் சிறப்பானது மற்றும் முக்கியமானது, எனென்றால், அந்த சதம், அந்த டெஸ்ட் போட்டியின் தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றியது மட்டுமில்லாமல், தொடரை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையினையும் வாய்ப்பையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்தது. இதில் கூடுதல் சிறப்பான விஷயம் இவை அனைத்தும், சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் மாலையில் நிகழ்ந்தது” என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது முதல் சர்வதேச சதத்தினை சச்சின் அடிக்கும் போது அவருக்கு வயது 17 என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.