தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம் கடந்து 122* ரன்களுடனும், ரஹானே 40* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான நேற்று மழை காரணமாக முழு நாள் ஆட்டமும் தடைப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி முதல் செஷனில் மழமழவென விக்கெட்களை இழந்தது. 272/3 என இருந்த இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 54 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து ஏமாற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்களும், ரஹானே 48 ரன்களும் எடுத்தனர். தென்னப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டின் எல்கர் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் இந்திய வீரர் முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவருடன் சேர்ந்து ஷர்துல் தாகூரும் தன் பங்கிற்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.
இந்த இன்னிங்ஸின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க வீர பவுமாவின் கேட்சை பிடித்தன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 டிஸ்மிசல்கள் எடுத்த கீப்பர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்தச் சாதனையை மிகவும் வேகமாக படைத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 டிஸ்மிசல்கள் செய்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
விக்கெட் கீப்பர்கள் | 100ஆவது டிஸ்மிசல் எடுத்த டெஸ்ட் போட்டி |
ரிஷப் பண்ட் | 26 |
மகேந்திர சிங் தோனி | 36 |
சாஹா | 36 |
கிரண் மோரே | 39 |
நயன் மோங்கியா | 41 |
சையத் கிர்மானி | 42 |
இந்தப் பட்டியலில் ஏற்கெனவே 36 டெஸ்ட் போட்டிகளில் 100 டிஸ்மிசல்கள் எடுத்திருந்த தோனி மற்றும் சாஹாவின் சாதனையை ரிஷப் பண்ட் 10 போட்டிகள் குறைவாகவே எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் படிக்க: தென் ஆப்பிரிக்கா டெஸ்டில் பும்ராவின் காயம்.. பிசிசிஐ கொடுத்த அப்டேட் என்ன?