தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம் கடந்து 122* ரன்களுடனும், ரஹானே 40* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான நேற்று மழை காரணமாக முழு நாள் ஆட்டமும் தடைப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி முதல் செஷனில் மழமழவென விக்கெட்களை இழந்தது. 272/3 என இருந்த இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 54 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து ஏமாற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்களும், ரஹானே 48 ரன்களும் எடுத்தனர். தென்னப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டின் எல்கர் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் இந்திய வீரர் முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை இந்திய வீரர் பும்ரா வீசினார். அப்போது 5ஆவது பந்தை வீசும் போது அவருடைய கால் சறுக்கி கீழே விழுந்தார். இதன்காரணமாக அவரை வெளியே அழைத்து சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு பிசிசிஐ சார்பில் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,”இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு வலது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அவருடைய காயத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பும்ராவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ஃபில்டிங் செய்து வருகிறார் ” எனப் பதிவிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா களத்தில் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா அணி சற்று முன்பு வரை 4 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தெ. ஆப்பிரிக்கா..! இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!