SA vs BAN T20 World Cup 2024: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்கா அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.


தென்னாப்ரிக்கா அணி த்ரில் வெற்றி:


முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, தென்னாப்ரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 109 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்படி, தென்னாப்ரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 


பேட்டிங்கில் சொதப்பிய தென்னாப்ரிக்கா:


நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹென்ற்க்ஸ் ரன் ஏதும் எடுக்காமல், எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் மார்க்ரம் ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், டிகாக் 18 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். 


சரிவில் இருந்த மீட்ட கிளாசென் - மில்லர் கூட்டணி:


இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளாசென் மற்றும் மில்லர் கூட்டணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களையும் விளாசினர். அதன்படி, கிளாசென் 44 பந்துகளில் 46 ரன்களையும், மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களையும் சேர்ந்த்து, தென்னாப்ரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேசம் சார்பில் டன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.


பந்துவீச்சில் மிரட்டிய தென்னாப்ரிக்கா:


எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. டன்ஜித் ஹசன் 9 ரன்களிலும், சாண்டோ 14 ரன்களிலும், லிடன் தாஸ் 9 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த  ஹிரிதாய் 34 பந்துகளில் 37 ரன்களையும், மஹ்மதுல்லா 27 பந்துகளில் 20 ரன்களையும் சேர்த்தனர்.


கடைசி ஓவரில் த்ரில் வெற்றி:


வங்கதேச அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவர விசிய சுழற்பந்துவீச்சாளரான மஹாராஜா, முதல் 5 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு, 2 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டஸ்கின் அஹ்மதால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தென்னாப்ரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், டி பிரிவில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்ற அந்த அணி , புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதோடு, சூப்பர் 8 சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது.