தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியுள்ளார் வங்கதேச பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப்.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில், இன்று (ஜூன் 10) நடைபெற்று வரும் 21 வது லீக் போட்டியில் குரூப் டி யில் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் விளையாடி வருகிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.


டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் காலி:


டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின் டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் களம் இறங்கினார்கள். இதில் ரீசா ஹெண்டிரிக்ஸ் 1 பந்து மட்டுமே பிடித்து வங்கதேச அணி வீரர் தன்சிம் ஹசன் வீசிய பந்தில் எல்.பி.டபூள்யூ ஆகி வெளியேறினார்.


இதனிடையே 11 பந்துகள் களத்தில் நின்ற மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குயின் டன் டி காக் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 18 ரன்களில் வெளியேறினார்.  தென்னாப்பிரிக்க அணி 19 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


குயின் டன் டி காக் விக்கெட்டையும் தன்சிம் ஹசன் தான் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து அணியை மீட்கும் பொறுப்பில் களம் இறங்கினார்கள் அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ். இவர்களாவது தங்களது அணியை மீட்டு ஒரு நல்ல ஸ்கோரை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் ரசிகர்களின் விருப்பத்தை பொய்யாக்கினார்கள் இருவரும். அதனபடி, 8 பந்துகள் களத்தில் நின்ற ஐடன் மார்க்ரம் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். அதேபோல் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அடுத்த பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.


தென்னாப்பிரிக்க அணியை மிரட்டிய தன்சிம் ஹசன் சாகிப்:


அதாவது 23 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. இச்சூழலில் களத்தில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் விளையாடி வருகின்றார். இவர்களாவது அணியை மீட்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நல்ல ஸ்கோரை இலக்காக வைப்பார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். முன்னதாக குரூப் டி யில் விளையாடி வரும் தென்னப்பிரிக்க அணி 2 போட்டிகளில் இதுவரை விளையாடி இரண்டும்  வெற்றி பெற்று அவர்களது குழுவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.


அதேபோல் வங்கதேச அணி 1 போட்டியில் மட்டுமே விளையாடி அந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இச்சூழலில் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.