SA Vs AUS World Cup 2023 Semi Final: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை அரையிறுதி:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில், புள்ளிப்பட்டியலில் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடம்பிடித்த தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
தென்னாப்ரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்:
கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுடன் மோத உள்ளது யார் என்பதை அறிய, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 1999ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் பெற்ற தோல்விக்கு ஆச்திரேலியாவை பழிவாங்கி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற தென்னாப்ரிக்கா அணி முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், 5 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 8வது முறையாக இறுதிப்போடிடிக்கு முன்னேற தீவிரம் காட்டுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் & பலவீனங்கள்:
தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார். முதலில் பேட்டிங் செய்யும்போது வலுவாக செயபட்டாலும், சேஸிங் என்று வரும்போது திணறுவதை கண்கூடாக காண முடிகிறது. குறிப்பாக ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் தென்னாப்ரிக்கா அணியின் புள்ளி விவரங்களும் மோசமாக இருப்பதை மறுப்பதிற்கில்லை. மறுமுனையில். முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் லீக் சுற்றின் முடிவில் தொடர் வெற்றிகளை குவித்தது. வார்னர். டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கின்றனர். நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. ஜாம்பா மட்டும் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். ஏராளமான நாக்-அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு கை கொடுக்கலாம்.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 109 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா அணி 55 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா அணி 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் சமனில் முடிய, ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
ஈடன் கார்டன் மைதானம் ஆரம்பத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும். நேரம் செல்ல செல்ல, சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். வேகப்பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். இரவு நேரத்தில் சேச்ங் செய்வது என்பது கடினமானதாக இருக்கும். ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து செயல்பட்டால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், வீரர்கள் அசத்தலாம்.
உத்தேச அணி விவரங்கள்:
தென்னாப்ரிக்கா:
குயின்டன் டி காக் , டெம்பா பவுமா (கேட்ச்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஆண்டிலே பெஹுலுக்வாயோ, ககிசோ ரபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சி.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா