இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 திருவிழா இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் மூன்று போட்டிகள்தான் மீதமுள்ளது. இதில் இந்திய அணி - நியூசிலாந்து அணி முதலாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை வான்கடேவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 397 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர்.  நியூசிலாந்து அணி தரப்பில் சௌதி 100 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 


398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஒரு சில ஓவர்கள் சிறப்பாக அமைந்தது. போட்டியின் 6வது மற்றும் 8வது ஓவரை வீசிய முகமது ஷமி, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டெவின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார். இருவரும் தலா 13 ரன்களில் தங்களது விக்கெட்டினை இழந்தனர். அதன்  பின்னர் இணைந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மிட்ஷெல் கூட்டணி சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 


மிட்ஷெல் கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு விளாசிவர, வில்லியம்சன் நிதானமாக பவுண்டிகளை விளாசுவதில் கவனம் செலுத்தினார். இருவரும் இணைந்து இந்தியாவின் வேகபந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என அனைத்தையும் சிதைத்தனர். இருவரும் அரைசதம் கடந்து தங்களது சதத்தினை நோக்கி முன்னேறினர். அதிரடியாக விளையாடிய மிட்ஷெல் தனது சதத்தினை 85 பந்தில் விளாசினார்.  வில்லியம்சன் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, முகமது ஷமி வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டினை 69 ரன்களில் இழந்து வெளியேறினார். வில்லியம்சன் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தரப்பில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் ஆனார்.  


இதற்கடுத்து வந்த டாம் லாதம் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதன் மூலம் போட்டியில் இந்தியாவின் கரம் தீடீரென உயர்ந்தது. ஆனால், அதற்கு பின்னர் வந்த பிலிப்ஸ் களத்தில் இருந்த மிட்ஷெல் உடன் இணைந்து அதிரடியாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். இவர்கள் கூட்டணி இறுதி வரை இருந்தால் இந்திய அணிக்கு வெற்றி மிகவும் சவாலாக இருக்கும் என யோசிக்கும் அளவிற்கு இருந்தது. 


ஆனால் 41 ரன்னில் பிலிப்ஸ் பும்ரா பந்திலும், சாம்ப்மன் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்திலும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். அதன் பின்னர் வந்த வீரர்கள் ரன்கள் குவிக்க முயற்சி செய்தாலும், இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டினை இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. முகமது ஷமி மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது. 


கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில்  நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி இன்று வெற்றி பெற்றுள்ளது.