SA Vs AFG World Cup 2023: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்  மோதுகின்றன.


உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 41 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.  நியூசிலாந்து அணி நான்காவது இடத்தை கிட்டத்தட்ட்ர உறுதிசெய்து விட்ட நிலையில், சில கணக்குகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் நூலிழை அளவு வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, 6வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உடன் மோத உள்ளது.


தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் மோதல்:


அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தென்னாப்ரிக்கா அணி ஒன்றில் மட்டுமே தோல்வியுற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், ஆப்கான்ஸ்தான் அணி இன்றைய போட்டியில் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். 


பலம் & பலவீனங்கள்:


தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.  குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார்.  அதேநேரம், கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறிப்பிடத்தகக்து. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சை கொண்டு ஜாலம் நிகழ்த்தி வருகிறது. பேட்டிங்கிலும் முன்கள வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு அணியாக சேர்ந்து முயற்சித்து வெற்றியை வசப்படுத்துவது ஆப்கானிஸ்தானின் கூடுதல் பலமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாய்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 1 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.


மைதானம் எப்படி?


நரேந்திர மோடி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைகிறது. அதேநேரம் போட்டியின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்து நின்று ஆட வேண்டியது குறிப்பிடத்தக்கது.


உத்தேச அணி விவரங்கள்:


தென்னாப்ரிக்கா:


குயின்டன் டி காக் , டெம்பா பவுமா (கேட்ச்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஆண்டிலே பெஹுலுக்வாயோ, ககிசோ ரபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சி.


ஆப்கானிஸ்தான்:


ஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில் (Wk), ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக் மற்றும் நூர் அகமது


வெற்றி வாய்ப்பு: தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.