விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னதாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இச்சூழலில், 4-வது இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதனிடையே இன்று (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி கட்டாய வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற சூழலில்தான் விளையாடியது.
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினார்கள்.
இதில், குசல் பெரேரா 28 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனிடையே அடுத்து களம் இறங்கிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொத்தனர். அதன்படி, குஷல் மெண்டிஸ் 6 ரன்களும் சமரவிக்ரமா 1 ரன்னும் , அசலங்கா 8 ரன்னும் எடுத்து நடையைக் கட்டினார்கள்.
இறுதிக் கட்டத்தில் தீக்ஷனா, மதுஷங்கா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க நியூசிலாந்து பௌலர்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், மதுஷங்காவை 48 பந்துகள் களத்தில் நின்று 19 ரன்கள் எடுத்தார். தீக்ஷனா 91 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இவ்வாறாக இலங்கை அணி 46. 4 ஓவர்கள் முடிவின் படி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு:
இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுத்கு செல்வதற்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. நியூசிலாந்து அணி இந்த 172 ரன்கள் இலக்கை 23 ஓவர்களில் சேஸ் செய்த காரணத்தால் , நவம்பர் 11 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 274 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற வேண்டும்.
இல்லையென்றால் 400 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்து 112 ரன்னுக்குள் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் 450 ரன்கள் எடுத்து 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல், பாகிஸ்தான் அணி 500 ரன்கள் எடுத்தால் 211 ரன்களுக்குள் இங்கிலாந்தை கட்டுப்படுத்த வேண்டும், இதில் ஏதாவது ஒன்று நடைபெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும்.
ஒரு வேளை இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடினாலே பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.