டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து-பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி மொயின் அலி வீசிய 2ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. 


இதைத் தொடர்ந்து வந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். முஸ்ஃபிகூர் ரஹிம் மற்றும் கேப்டன் மஹமதுல்லா நிதானமாக ஆடி பங்களாதேஷ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 10 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ரஹிம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அஃபிஃப் ஹூசைன் மஹமதுல்லாவுடன் ஜோடி சேர்ந்தார். 




ஆட்டத்தின் 12ஆவது ஓவரை லியாம் லிவிங்ஸ்டன் வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தை மஹமதுல்லா ஷார்ட் லெக் திசையில் அடித்தார். அப்போது அவர் ஒரு ரன் ஓடினார். அந்த சமயத்தில் இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸ் பந்தை சற்று மிஸ் ஃபில்டு செய்தார். இதனால் மீண்டும் ஒரு ரன் எடுக்க முயன்ற மஹமதுல்லா ஹூசைனை அழைத்தார். ஆனால் அதற்குள் டைமல் மில்ஸ் பந்தை தூக்கி ஏறிந்ததை பார்த்து அவர் பாதியில் நின்று விட்டார். இதனால் மறுமுனையில் ஹூசைன் ரன் அவுட் ஆகினார். இந்த சம்பவத்தை பார்த்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சில்வர்வூட் மிகவும் வாய்விட்டு சிரித்தார். அத்துடன் இந்த ரன் அவுட்டை பார்த்து சமூக வலைதளத்தில் பலரும் தங்களுடைய சிரிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். 






மேலும் பங்களாதேஷ் கேப்டன் மஹமதுல்லா டி20 போட்டிகளில் 25ஆவது முறையாக தன்னுடைய சக வீரரை ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்துள்ளார். இதுகுறித்தும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.






இறுதியில் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டும் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 125 ரன்கள் என்ற எளியை இலக்கை நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் டைமல் மில்ஸ் 3 விக்கெட்டும், மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 


மேலும் படிக்க: டிவி நிகழ்ச்சியில் மைக்கை தூக்கி எறிந்துவிட்டு நடையைக்கட்டிய சோயப் அக்தர்.. நடந்தது என்ன?