இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் தனது விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்க வேண்டிய கடைசி நாளான அக்டோபர் 26-ம் தேதி, டிராவிட் தனது விண்ணப்பத்தை தாக்கல் செய்திருக்கிறார். 


இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி2-0 உலகக்கோப்பை தொடரும் முடிவடைகிறது. இதனால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக செயல்பட்டு வரும் டிராவிட், விரைவில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் மாதத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.






டிராவிடோடு யார் யார்?


டிராவிட்டின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான பராஸ் மாம்ப்ரே இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பவர். இந்தியாவின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் ஷர்மா, அஜய் ரத்ரா ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


டிராவிட் மற்றும் அவரோடு பொறுப்பேற்க இருக்கும் பயிற்சியாளர்களுக்கு 2023 உலகக்கோப்பை வரை இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்படும் என பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவிக்கிறது. டிராவிட்டின் பயிற்சியாளர் ஊதியம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், மாதம் ரூ. 10 கோடி சம்பளம் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



டிராவிட் இடத்தில் விவிஎஸ் லட்சுமணன்


முன்னதாக, இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மற்றும் விவிஎஸ் லட்சுமணனின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் இந்த இரண்டு வீரர்களும் இந்த பொறுப்பிலிருந்து பின்வாங்கிவிட்டனர். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவின் பல முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக ஆர்வம் காட்டினர். ஆனால் இந்த பொறுப்பை இந்தியருக்கு மட்டுமே கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது. மேலும், பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய அணி கேப்டனுமான கங்குலியின் முதல் தேர்வு ராகுல் டிராவிட் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பார் என்று கூறப்படுகிறது. 


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை டிராவிட்டுக்கு வழங்கப்படும் நிலையில், தற்போது அவர் பதவி வகித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் இயக்குனராக விவிஎஸ் லட்சுமணன் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண