டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி நேற்று நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டிக்காக பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தின் போது அந்நாட்டு கிரிக்கெட் தொகுப்பாளர் நவ்மன் நாஸ் என்பவருக்கும் சோயிப் அக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே சோயிப் அக்தர் வெளியேறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வேகமாக வீடியோ ஒன்று வெளியானது. இந்தச் சூழலில் சோயிப் அக்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், “நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல விதமான வீடியோக்கள் வலம் வருகின்றன. அதனால் அந்த விவகாரத்தை தெளிவுப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை.
நேற்று விவாதத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து நானும் சக வீரர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சியில் நாவ்மன் நாஸ் என்னை சற்று மட்டம் தட்டிய வகையில் பேசினார். அதற்கு அவர் நிகழ்ச்சியிலேயே ஒரு சிறிய மன்னிப்பு கேட்டிருந்தால் நான் தொடர்ந்து இருப்பேன். அவர் அதை மறுக்கவே நான் அந்த நிகழ்ச்சியில் இருந்த மற்றவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் உடனே வெளியேறினேன். அதற்கு மேல் அங்கு இருந்து ஒரு தர்ம சங்கடமான சூழலை உருவாக்க நான் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கங்குலியின் ஒரே சாய்ஸ்..ரூ.10 கோடி சம்பளம்...உலகக்கோப்பை டார்கெட்: இந்திய அணியை வழிநடத்த டிராவிட் ரெடி