Rohit Sharma: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, வெளியேற்றப்படலாம் அல்லது டிரேட் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


முடிந்தது ரோகித் சர்மாவின் மும்பை பயணம்?


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்),  மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏலத்திற்கான விதிகள் மற்றும் தேதியை ஐபிஎல் கவுன்சில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், மும்பை ரோகித்தை விடுவிக்கலாம் அல்லது ரோகித் சர்மா தனது பெயரை ஏலத்திற்கு கொண்டு செல்லலாம் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. 


சிக்கலில் மும்பை - ரோகித் சர்மா உறவு?


கடந்த டிசம்பரில் கேப்டன் பதவியில் இருந்து அதிர்ச்சியூட்டும் வகையில் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ரோகித் மற்றும் மும்பை அணி நிர்வாகம் இடையேயான உறவு  சிக்கலாக உள்ளதாக கூறப்படுகிறது. அணியின் இந்த முடிவை ரோகித் சர்மா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த முடிவை தொடர்ந்து நடந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கட்டமைப்பு சிதைந்து காணப்பட்டது. ரோகித் சர்மா - ஹர்திக் இடையே பனிப்போர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.


வெளியேறுகிறாரா ரோகித் சர்மா?


இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, மும்பை இந்தியன்ஸில் ரோகித்தின் ஐபிஎல் பயணம், 10 ஆண்டுகளாக அவர் வழிநடத்திய ஐபிஎல் வாழ்க்கை, ஐந்து கோப்பைகளை வென்றது உட்பட அனைத்தும் முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.  


தொடர்ந்து, “ரோகித் அணியில் நீடிப்பாரா, வெள்யேறுவாரா? என்பது பெரிய கேள்வி. தனிப்பட்ட முறையில் அவர் மும்பை அணியில் நீடிக்க மாட்டார்  என்று நினைக்கிறேன். யாரைத் தக்கவைத்தாலும், அவர் மூன்று ஆண்டுகள் உங்களுடன் இருப்பார். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் கதை மிகவும் வித்தியாசமானது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் மும்பை அணி அப்படி இல்லை. எனவே ரோகித் தானாகவே வெளியேறலாம் அல்லதுஅண் நிர்வாகம் அவரை விடுவிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


லக்னோ அணியில் ரோகித் சர்மா?


டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனை டிரேட் மூலம் வாங்குவதில், லக்னோ அணி நிர்வாகம் ஆர்வமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.எஸ்.ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ரோகித் தனது விருப்பப்பட்டியலின் ஒரு பகுதியாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், ஏலத்தில் இந்திய கேப்டனை வாங்க 50 கோடி ரூபாய் வைத்திருந்ததாக வெளியான வதந்திகளை மறுத்தார். இதனிடையே, கே.எல். ராகுலும் தான் கேப்டன் பதவியை வகிக்க விரும்பவில்லை எனவும், வீரராக லக்னோ அணியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஏற்பட்டுள்ள லக்னோ அணியின் கேப்டன் பதிவிக்கான வெற்றிடத்தை, ரோகித் சர்மா நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.