இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடிய இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. மேலும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:
இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடக்கவில்லை.
நாளை வரும் சென்னை:
இந்த நிலையில், இந்திய அணி – வங்கதேச அணி மோதும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே நடைபெற்றுள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி நாளை சென்னை வர உள்ளது.
நாளை சென்னை வர உள்ள இந்திய அணியினர் தங்களது பயிற்சியை விரைவில் தொடங்க உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் அனுபவ வீரர்கள் விராட் கோலி. கே.எல்.ராகுல். பும்ரா. ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், யஷ் தயாள், ரிஷப்பண்ட், துருவ் ஜோயல், சர்பராஸ் கான் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
இந்திய அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என்பதால் அதற்கு முன்பு வங்கதேச தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலே வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியதால் இந்த தொடரில் இந்திய அணி கவனமாக ஆட வேண்டியதும் அவசியம் ஆகும்.
ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணியில் லிட்டன்தாஸ், மெஹிதி ஹாசன் உள்ளிட்ட பலரும் அந்த அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். இந்த தொடர் நிச்சயமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.