இங்கிலாந்தின் பழமையான ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று இந்த சாம்பியன் மகுடத்தை கைப்பற்றப்போவது யார்? மற்றொன்று விராட்கோலியின் பேட்டிங் எப்படி இருக்கப்போகிறது? என்பதே ஆகும்.


லெஜண்ட் கிரிக்கெட்டராக உலா வரும் விராட்கோலி ஒவ்வொரு போட்டியிலும் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் ஏதாவது ஒரு புதிய சாதனையாக பதிவாகி வருகிறது. அந்த வரிசையில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட்கோலி ஏராளமான சாதனைகள் முறியடிக்கப்பட உள்ளது.


அதிக நாக் – அவுட் போட்டிகள்:


ஐ.சி.சி.யின் நாக் அவுட் போட்டிகளில் அதிகளவில் ஆடிய வீரர் என்ற பெருமையை ரிக்கிபாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். 50 ஓவர் உலககோப்பை, டி20 உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என பல வடிவங்களில் அவர் 18 போட்டிகள் ஆடியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் யுவராஜ்சிங் 17 போட்டிகளில் ஆடியுள்ளார். விராட்கோலி, சச்சின் மற்றும் தோனி 15 போட்டிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். நாளைய போட்டி மூலம் விராட்கோலி அதிக நாக் அவுட் போட்டிகள் ஆடிய வீரர்கள் என்ற பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேற உள்ளார்.


ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 ஆயிரம் ரன்கள்:


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட்கோலி இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 92 போட்டிகளில் ஆடி 4945 ரன்கள் விளாசியுள்ளார். சராசரியாக 50.97 ரன்கள் அடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 55 ரன்கள் விளாசினால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 5 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெறுவார்.


இங்கிலாந்தில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்:


இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள்(அனைத்து வடிவ கிரிக்கெட்) விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை பயிற்சியாளர் ராகுல்டிராவிட் தன்வசம் வைத்துள்ளார். அவர் இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 645 ரன்கள் அடித்துள்ளார். 2வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2 ஆயிரத்து 626 ரன்கள் அடித்துள்ளார். தற்போது 3வது இடத்தில் உள்ள விராட்கோலி 2 ஆயிரத்து 574 ரன்களுடன் உள்ளார். நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் அபார சதம் விளாசினால் புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.


ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள்:


ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனை தற்போது புஜாரா வசம் உள்ளது. அவர் நாதன் லயனுக்கு எதிராக மட்டும் 570 ரன்கள் விளாசியுள்ளார். இந்த  பட்டியலில் நாதன் லயனுக்கு எதிராக விராட்கோலி 511 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ஸ்டூவர்ட் ப்ராடுக்கு எதிராக 520 ரன்களும், சங்ககாரா சயீத் அஜ்மலுக்கு எதிராக 531 ரன்கள் விளாசியுள்ளார். இதனால், இறுதிப்போட்டியில் விராட்கோலி புதிய சாதனை படைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


நாக் அவுட் போட்டியில் அதிக ரன்கள்:


நாக் அவுட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருப்பவர் ரிக்கி பாண்டிங், அவர் 18 போட்டிகளில் 731 ரன்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 14 நாக் அவுட் ஆட்டங்களில் 657 ரன்களுடன் உள்ளார். 3வது இடத்தில் விராட்கோலி 620 ரன்களுடன் உள்ளார். நடைபெற உள்ள போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு வாய்ப்பு உள்ளது ஆகும்.