இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இன்று முதல் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர் முழுவதும் இருந்தாலும், இரண்டாவது டெஸ்ட் மழை காரணமாக டிரா ஆனது.


இருப்பினும் இந்திய வீரர்களின் பேட்டிங் தரப்பு வலுவாக செயல்பட்டது. குறிப்பாக கேப்டன் ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக மற்ற வீரர்களுக்கு முன்னோடியாக ரன் குவித்தார். அவர் முதல் டெஸ்டில் ஆடிய ஒரே இன்னிங்ஸில் ஒரு முக்கியமான சதத்தை விளாசினார். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 80 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக 57 ரன்கள் குவித்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தார். இந்த தொடரின் போது ரோகித் கடந்துள்ள 5 சாதனை மைல்கற்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


3500 ரன்களை கடந்தார்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த கேப்டன் ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 3500 ரன்களை கடந்தார். அவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 3677 ரன்கள் குவித்துள்ளார்.



தொடக்க பார்ட்னர்ஷிப் சாதனைகள்


ரோகித் சர்மா (103), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (171) உடன் இணைந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தார். இருவரும் முதல் டெஸ்டில் 229 ரன்கள் குவித்தனர். இதற்கு முன் வாசிம் ஜாஃபர் மற்றும் வீரேந்திர சேவாக் இணைந்து 159 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.


தொடர்புடைய செய்திகள்: ADR Report: இந்தியாவில் எந்த எம்.எல்.ஏ.வுக்கு எவ்வளவு சொத்து? - வெளியானது பட்டியல் - ஆய்வறிக்கையில் அதிர்ச்சி!


அதிவேக அரைசதம்


ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 35 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், தனது டெஸ்ட் வாழ்க்கையின் அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். அதே இன்னிங்ஸில் டெஸ்டில் இந்தியாவுக்காக வேகமான 50 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பையும் (5.3 ஓவரில் 50 ரன்கள்) ரோகித் - ஜெய்ஸ்வால் தொடக்க ஜோடி முறியடித்தது.



சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்று, எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளினார் ரோகித். அவர் தற்போது 17,355 சர்வதேச ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கர் (34,357), விராட் கோலி (25,484), ராகுல் டிராவிட் (24,064) மற்றும் சவுரவ் கங்குலி (18,433) ஆகியோருக்கு பின் உள்ளார்.


தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் ரன் குவிப்பு


ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரட்டை இலக்க ஸ்கோரை பதிவு செய்வதில் மஹேலா ஜெயவர்த்தனேவின் சாதனையை முடியடித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 30வது முறையாக தொடர்ச்சியான இரட்டை இலக்க ரன்னை அவர் பதிவு செய்துள்ளார். மஹேல ஜெயவர்த்தனே 29 முறை தொடர்ச்சியாக இரட்டை இலக்க ஸ்கோர் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.