கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 8 வது சீஸன் கிரிக்கெட் போட்டி இன்று (05 ஜூலை 2024) சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர்கொள்கிறது. 


டிஎன்பிஎல் அணிகள்: 


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது ஜூலை 5 ஆம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மொத்தம் 32 போட்டிகள் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது. 



4 முறை சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:


இதுவரை 2017, 2019, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை 4 முறை கைப்பற்றி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பலம் வாய்ந்த அணியாக இந்த டி.என்.பி.எல்லில் வலம் வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல் தொடரில் 5வது இடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பல திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளதோடு டி.என்.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாராயண் ஜெகதீசன் தமிழ்நாட்டின் அனுபவமிக்க ஆல் ரவுண்டர்களான ராஜகோபால் சதீஷ், அபிஷேக் தன்வர், எம்.சிலம்பரசன் போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் அனுபவமிக்க வீரரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரருமான பாபா அபரஜித் இம்முறை சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு கேப்டனாக செயல்படவுள்ளார். 



ஹாட்ரிக் பட்டத்தை குறிவைக்கும் லைகா கோவை கிங்ஸ்:


2022 ஆம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து லைகா கோவை கிங்ஸ் 6 வது சீசனின் டி.என்.பி.எல் பட்டத்தை பகிர்ந்து கொண்டது. அதன் பின் முந்தைய 2023 ஆம் ஆண்டின் டி.என்.பி.எல் பட்டத்தை தொடர்ச்சியாக 2 வது முறை கைப்பற்றி இம்முறை ஹாட்ரிக் பட்டத்தை குறிவைத்து லைகா கோவை கிங்ஸ் களமிறங்கவுள்ளது.


லைகா கோவை கிங்ஸ் தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல அவர்களின் கேப்டன் ஷாருக் கானின் ஆல் ரவுண்ட் திறமையும், ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் இளம் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் சாய் சுதர்சனின் அற்புதமான பேட்டிங்கும் முக்கியப் பங்கு வகித்தது. அவர்களைத் தவிர அதிரடி ஓப்பனர் சுரேஷ் குமார், திறமையான மிடில் ஆர்டர் முகிலேஷ், ஆல் ரவுண்டர் டர் மொஹம்மது எம் போன்ற டி.என்.பி.எல் அனுபவமிக்க வீரர்கள் அந்த அணியில் நிறைந்துள்ளனர்.


எனவே இன்று நடைபெற உள்ள முதல் போட்டியானது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.