இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மீண்டு வந்த விதம் சிறப்பாக இருந்தது என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.


36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசித்த நியூசிலாந்து:


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஆட்டத்தின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 402 ரன்களை குவித்தது.


இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ் கானின் சதத்துடன் இந்திய அணி 462 ரன்களை எடுக்க, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. அதன்படி ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று அந்த இலக்கை எளிமையாக எட்டிய நியூசிலாந்து அணி தங்களது வெற்றி பதிவு செய்தது. கடந்த 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி இந்தியாவில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.


சண்டை செய்தோம்:


இச்சூழலில் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "உண்மையிலேயே இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸின் போது நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 350 ரன்கள் பின்னடைவை சந்தித்தபோது நிச்சயம் இரண்டு வீரர்கள் நின்று ஆடினால் ஓரளவு முன்னிலை பெற முடியும் என்று நினைத்தோம்.


அந்த வகையில் இந்த போட்டியில் சர்பராஸ் கான், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடிய போது நாங்கள் ஆட்டத்திற்குள் இருந்ததாகவே நினைக்கிறேன். நாங்கள் நினைத்திருந்தால் இந்த போட்டியில் எளிதாக இரண்டாவது இன்னிங்சில் சுருண்டிருக்க முடியும். ஆனாலும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மீண்டு வந்த விதம் திருப்தி அளிக்கிறது"என்றார்.


சற்றும் எதிர்பார்க்கவில்லை:


தொடர்ந்து பேசிய அவர்,"சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களது முதிர்சியை காண்பித்து இருந்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நான்காவது போட்டியில் மட்டுமே விளையாடும் சர்பராஸ் கான் அழுத்தமான சூழ்நிலையிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற தவறான முடிவை எடுத்து விட்டேன்.


ஆனால் 46 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டு விடுவோம் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மீண்டு வந்த விதம் சிறப்பாக இருந்தது. இன்னும் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம்"என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.