உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி ஆடி வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.


இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான தொடக்கம் தந்தார். கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய ரோகித்சர்மா இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர் என்று விளாசிய கேப்டன் ரோகித்சர்மா 63 பந்துகளில் சதம் விளாசினார். இந்த ஒரு போட்டியில் மட்டும் ரோகித்சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த சாதனைகளின் பட்டியலை கீழே காணலாம்.


சாதனைகள்:



  • சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ( கிறிஸ் கெயிலின் 553 சிக்ஸர்கள் சாதனையை இந்த போட்டியில் முறியடித்தார்).

  • ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (6) சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சதம் (7) விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

  • ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அவர் 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

  • ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


இந்த போட்டி மூலம் பல சாதனைகளை படைத்த கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 31வது சதம் ஆகும். அவர் 253 ஒருநாள் போட்டிகளில் ஆடி 31 சதங்கள், 3 இரட்டை சதம்,  52 அரைசதம் விளாசியுள்ளார். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்ஸருடன் 131 ரன்களை எடுத்து அவுட்டானார். இந்திய அணியை ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்த பிறகே அவுட்டானார்.


கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய ரோகித்சர்மா இந்த போட்டியில் சதம் விளாசியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித்சர்மாவுக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த இஷன்கிஷன் 47 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 35 ஓவர்களிலே இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. கோலி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் ரன்ரேட்டும் உயர்ந்துள்ளது. 


மேலும் படிக்க: Rohit Sharma Record: சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் - என்னன்னு நீங்களே பாருங்க!


மேலும் படிக்க: Wrestlers Food Poison: ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த இளம் மல்யுத்த வீரர்கள் - உணவு ஒவ்வாமையால் பயிற்சியாளர் பாதிப்பு