உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு போட்டியில் இரு அணி தரப்பிலும் சேர்த்து மொத்தம் 4 சதங்கள், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர், நடந்து முடிந்த 8 போட்டியில் மொத்தம் 10 சதங்கள் விளாசப்பட்டது உள்ளிட்ட நாளுக்கு நாள் உலகக் கோப்பைத் தொடரில் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு சாதனைகளும் நடந்து வருகின்றது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலுல் 4வது இடத்தில் உள்ள இந்தியாவும் 9வது இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தானும் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி மோதிக் கொண்டன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பந்து வீசியது.
இந்திய அணியின் பந்து வீச்சினை தொடக்கதில் சிறப்பாக எதிர்கொண்ட ஆஃப்கான் அணியின் தொடக்க ஜோடி குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜோடி சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்தது. இந்த ஜோடியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். இவரது பந்தில் இப்ராஹிம் தனது விக்கெட்டினை விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து இழந்து வெளியேறினார். 14வது ஓவரின் முதல் பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தந்து 3 விக்கெட்டினை இழந்து நெருக்கடிக்கு ஆளானது. 3 விக்கெட்டுகளை இழந்தபோது ஆஃப்கானிஸ்தான் அணி 63 ரன்கள் சேர்த்து தத்தளித்து வந்தது.
இக்கட்டான சூழலில் அஸ்மதுல்லா மற்றும் ஹஸ்மதுல்லா கூட்டணி பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடியது. இருவரும் கிடைத்த பந்துகளில் அதிகம் சிங்கிள் எடுத்ததுடன் சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் விளாசினர். இதனால் ஆஃப்கான் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசினர். இவர்களை பிரிக்க இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போனது.
போட்டியின் 35வது ஓவரில் அஸ்மதுல்லா தனது விக்கெட்டினை இழந்தார். 128 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்மதுல்லா தனது விக்கெட்டினை இழந்தார். சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த ஆஃப்கான் அணி 38வது ஓவரிலேயே 200 ரன்களை எட்டியது. இதையடுத்து சிறப்பாக விளையாடி சதம் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹஸ்மதுல்லா தனது விக்கெட்டினை 80 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
இந்திய வீரர்கள் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினாலும் அதற்கு ஆஃப்கான் வீரர்களிடம் நல்ல ஷாட் இருந்தது. இதனால் அவர்களின் ரன்ரேட் சிராக உயர்ந்தது. 45வது ஓவரில் பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆஃப்கானின் ரன்ரேட் கட்டுக்குள் வந்தது. இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து பவுண்டரிகளை மீண்டும் விளாசியதால் அணியின் ஸ்கோர் நல்ல நிலைக்குச் சென்றது. இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4விக்கெட்டுகள் கைப்பற்றினார்.