இந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது


இதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் வீசிய பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் எடுத்தார்.


மறுபுறம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அப்போது களம் இறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆக, பின்னர் வந்த ராஜத் படிதர் 5 ரன்களில் நடையைக்கட்டினார். இதனிடையே ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.  அதன்படி ,157 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். அந்த வகையில் மொத்தம் 196 பந்துகள் களத்தில் நின்ற அவர் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 131 ரன்களை குவித்தார்.


தோனியை பின்னுக்குத்தள்ளிய ரோகித்:


இந்நிலையில் இந்த போட்டியில் தன்னுடைய இரண்டாவது சிக்ஸரை அடித்த போது அதிக சிக்ஸர்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா. அதாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த எம்.எஸ்.தோனியை பின்னுக்குத்தள்ளியுள்ளார் ரோஹித் ஷர்மா. அதன்படி, இதுவரை 97 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 79 சிக்ஸர்களை குவித்திருக்கிறார்.


டெஸ்டில் இந்தியர்களின் அதிக சிக்ஸர்கள்:



  • வீரேந்திர சேவாக் - 180 இன்னிங்ஸில் 91 சிக்ஸர்கள்

  • ரோகித் சர்மா - 97 இன்னிங்ஸில் 79 சிக்ஸர்கள்

  • எம்.எஸ் தோனி - 90 இன்னிங்ஸ்களில் 78 சிக்ஸர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 329 இன்னிங்ஸில் 69 சிக்ஸர்கள்

  • கபில்தேவ் - 184 இன்னிங்ஸில் 61 சிக்ஸர்கள்


முன்னதாக சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை குவித்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். இதுவரை அவர் விளையாடியுள்ள 179 இன்னிங்களில் 128 சிக்ஸர்களை பறக்கவிட்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் (176 இன்னிங்சில் 107 சிக்ஸர்கள்), ஆஸ்திரேலிய அணி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (137 இன்னிங்சில் 100 சிக்சர்கள்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!


மேலும் படிக்க:India Domestic Cricket New Rules: எந்த சாக்குபோக்கும் வேணாம்; கோலி, ரோஹித் விதிவிலக்கல்ல; பறந்த புது உத்தரவு: பிசிசிஐ அதிரடி