லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து நிர்ணயித்த 111 ரன்கள் என்ற இலக்கை ரோகித்சர்மா அதிரடியால் இந்தியா எளிதாக எட்டிப்பிடித்தது. இந்த போட்டியில் மட்டும் கேப்டன் ரோகித்சர்மா 58 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 76 ரன்கள் விளாசினார்.
இந்த போட்டி மூலம் ரோகித்சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 250 சிக்ஸ்ர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற அரிய சாதனையை ரோகித்சர்மா படைத்துள்ளார். ரோகித்சர்மா இதுவரை 231 ஒருநாள் போட்டிகளில் 224 இன்னிங்சில் பேட் செய்து 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவற்றில் பவுண்டரிகள் 852 அடங்கும்.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் 398 போட்டிகளில் 69 இன்னிங்சில் பேட் செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்திய அளவில் ரோகித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி உள்ளார். தோனி 350 போட்டிகளில் ஆடி 297 இன்னிங்சில் பேட் செய்து 229 சிக்ஸர்களுடன் இந்திய அளவில் இரண்டாவது வீரராக உள்ளார். அவற்றில் 826 பவுண்டரிகளும் அடங்கும்.
ALSO READ | IND vs ENG 1st ODI Highlights: இங்கி. எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்..! என்னென்ன தெரியுமா?
சர்வதேச அளவில் அப்ரிடிக்கு அடுத்த இடத்தில் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் 331 சிக்ஸர்களுடனும், ஜெயசூர்யா 270 சிக்ஸர்களுடனும் உள்ளனர். சர்வதேச அளவில் ரோகித்சர்மா 4வது இடத்தில் உள்ளார். அவர் விரைவில் ஜெயசூர்யா சாதனையை தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
35 வயதான ரோகித்சர்மா 45 டெஸ்ட் போட்டிகளில் 64 சிக்ஸர்களையும், 128 டி20 போட்டிகளில் 157 சிக்ஸர்களையும், 227 ஐ.பி.எல். போட்டிகளில் 240 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரத்து 137 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 9 ஆயிரத்து 283 ரன்களையும், டி20 போட்டியில் 3 ஆயிரத்து 379 ரன்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரத்து 879 ரன்களையும் விளாசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்