இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் பும்ரா. ஷமியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. மிக எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா – ஷிகர்தவான் ஜோடி அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.
இந்திய அணிக்காக ஏராளமான போட்டிகளில் தொடக்க வீரர்களாக ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் அரிய சாதனை படைத்தனர். அதாவது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த ஜோடி என்ற அரிய சாதனையை படைத்தனர். இதற்கு முன்னதாக, இந்த சாதனையை ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரும், சவ்ரவ் கங்குலி ஜோடியும் படைத்துள்ளனர்.
சர்வதேச அளவில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், சவ்ரவ் கங்குலியும்தான் உள்ளனர். இருவரும் இணைந்து 176 போட்டிகளில் ஜோடி சேர்ந்து 8 ஆயிரத்து 227 ரன்களை சேர்த்துள்ளனர். அதிகபட்சமாக இந்த ஜோடி 258 ரன்களை சேர்த்துள்ளது. தற்போது, கிரிக்கெட் ஆடும் வீரர்களிலே இவர்களுக்கு அடுத்த இடத்தில் ரோகித்சர்மா – ஷிகர்தவான் ஜோடிதான் உள்ளனர்.
ரோகித் – ஷிகர்தவான் ஜோடி 2011ம் ஆண்டு முதல் சேர்ந்து ஆடி வருகின்றனர். இந்த ஜோடி இதுவரை 114 போட்டிகளில் ஒன்றாக ஆடி 5 ஆயிரத்து 124 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக 210 ரன்களை சேர்த்துள்ளது. இந்த ஜோடி சேர்ந்தபோது 17 சதங்களும், 16 அரைசதங்களும் விளாசப்பட்டுள்ளது. இந்த ஜோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பது ரோகித்சர்மா –விராட்கோலி ஜோடி. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 81 போட்டிகளில் 4 ஆயிரத்து 906 ரன்களை விளாசியுள்ளனர். இவற்றில் 18 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும்.
முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் – சவ்ரவ் கங்குலி ஜோடி 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தொடக்க வீரர்களாக மட்டுமின்றி, பல வரிசையில் ஜோடி சேர்ந்து ஆடியுள்ளனர். இவர்கள் ஜோடி சேர்ந்தபோது மட்டும் 26 சதங்களும், 29 அரைசதங்களும் விளாசப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்