இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்தது மட்டுமின்றி இந்திய வீரர்களின் பல்வேறு சாதனைகளையும் சுமந்து மறக்க முடியாத போட்டியாக மாறியுள்ளது.


ரோகித் – ஷிகர்தவான் பார்ட்னர்ஷிப் :


இங்கிலாந்து அணி நிர்ணயித்த 111 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலே இந்திய அணி எட்டிப்பிடிப்பதற்கு ரோகித்சர்மா- ஷிகர்தவான் கூட்டணியின் அபாரமான ஆட்டம் கைகொடுத்தது. இந்த போட்டி மூலம் சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து 112 போட்டிகளில் 5 ஆயிரத்து 108 ரன்களை குவித்துள்ளனர். முதலிடத்தில் சச்சின் – கங்குலி ஜோடி உள்ளது.


ரோகித்சர்மா 250 சிக்ஸர்கள் :



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித்சர்மா இந்த போட்டியில் படைத்தார். அவர் இன்று நடைபெற்ற போட்டியில் மட்டும் 5 சிக்ஸர்களை விளாசினார். சர்வதேச அளவில் நான்காவது வீரர் என்ற அரிய சாதனையையும் படைத்துள்ளார். ரோகித்சர்மாவுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி 229 சிக்ஸர்களுடன் உள்ளார்.


பும்ரா சிறந்த பந்துவீச்சு :




உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா இன்று நடைபெற்ற போட்டியில் தன்னுடைய புதிய சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 7.2 ஓவர்கள் மட்டுமே வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதில் 3 ஓவர்கள் மெய்டன் ஆகும். இதில், ஜேசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் ஆகியோர் டக் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தனது ஒருநாள் கேரியரில் புதிய சிறந்த பந்துவீச்சை பும்ரா பதிவு செய்தார்.


ஷமி சாதனை :



இங்கிலாந்து அணியை 111 ரன்களுக்கு சுருட்டியதில் முகமது ஷமியின் பங்கு தவிர்க்க முடியாததாக அமைந்தது. அவர் 7 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் அவர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய அதிவேகமாக கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, இந்த சாதனையை அஜித் அகர்கர் 97 போட்டிகளில் படைத்திருந்தார்.


இந்தியாவின் பெரிய வெற்றி :


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எதிரணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்துவது மிகப்பெரிய விஷயம் ஆகும். இன்றைய போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற 7வது பெரிய வெற்றி ஆகும். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிகளிலே அதிக பந்துகளை மீதம் வைத்து பெற்ற 2வது வெற்றி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. இன்றைய போட்டியில் 188 பந்துகள் மீதம் வைத்து இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன்பு 2001ம் ஆண்டு கென்ய அணியை 231 பந்துகள் மீதம் வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதுதான் மிகப்பெரிய வெற்றி ஆகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண