ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிகய அணி இந்திய அணிக்கு 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மெகா இலக்கை நோக்கி வாஷிங்டன் சுந்தருடன் ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ரோகித்சர்மா ஆட்டம் தொடங்கியது முதல் அதிரடியாக ஆடினர்.
550 சிக்ஸர்கள்:
பவுண்டரி, சிக்ஸர் என ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் இந்தியாவின் ஸ்கோரையும் ஏற்றினார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் அவுட்டானாலும் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த அவர் இந்த போட்டியில் 57 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசியிருந்த நிலையில் 81 ரன்களில் அவுட்டானார்.
ஹிட் மேன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோகித்சர்மா இந்த போட்டியில் புதிய வரலாறு படைத்தார். அதாவது, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஆகிய 3 வடிவ போட்டிகளிலும் சேர்த்து 550 சிக்ஸர்களை விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 550 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
கெயிலுக்கு அடுத்து ரோகித்:
அதேபோல, ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் 550 சிக்ஸர்களை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையையும் ரோகித்சர்மா படைத்துள்ளார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். கிறிஸ் கெயில் 548 இன்னிங்சில் படைத்த இந்த சாதனையை, ரோகித் சர்மாவும் தன்னுடைய 471வது இன்னிங்சில் படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக கிறிஸ் கெயில் சர்வதேச அரங்கில் 553 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். ரோகித்சர்மா 551 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். ரோகித்சர்மா அடுத்து உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளதால் அவர் நிச்சயமாக கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா தடுமாற்றம்:
37 வயதான ரோகித்சர்மா டெஸ்ட் போட்டிகளில் 77 சிக்ஸர்களையும், ஒருநாள் போட்டியில் 292 சிக்ஸர்களையும், டி20யில் 182 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரத்து 677 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 10 ஆயிரத்து 112 ரன்களையும், டி20யில் 3 ஆயிரத்து 853 ரன்களையும் விளாசியுள்ளார். இதுதவிர, 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 6211 ரன்களை அடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் மட்டும் 257 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
இதுமட்டுமின்றி ரோகித்சர்மா கடைசியாக ஆடிய 23 ஒருநாள் போட்டிகளில் 9 அரைசதங்களும், 1 சதமும் விளாசியுள்ளார். இன்றைய போட்டியில் தன்னுடைய 30வது அரைசதத்தை ரோகித்சர்மா அடித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு விராட்கோலியும் 51 ரன்களில் அவுட்டானார். தற்போது வரை இந்திய அணி 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களுடன் ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் - ஸ்ரேயாஸ் அய்யர் ஆடி வருகின்றனர்.