இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி முதல் 2 ஒருநாள் போட்டியில் தோற்ற நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 போட்டியில் ஓய்வில் இருந்த விராட்கோலி. கேப்டன் ரோகித்சர்மா, பும்ரா இந்த போட்டியில் அணிக்கு திரும்பினர்.
ஆஸ்திரேலிய அதிரடி:
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மார்ஷ் – டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடினர். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் ஏறியது. டேவிட் வார்னர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், டேவிட் வார்னர் 34 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்களை விளாசி 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதன்பின்பு வந்த ஸ்டீவ் ஸ்மித் ஒத்துழைப்பு அளிக்க மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடினார். 78 ரன்களில் ஜோடி சேர்ந்த இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். இவர்களது அதிரடியை பார்த்தபோது ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எட்டுவது போல இருந்தது.
கடைசியில் கட்டுப்பாடு:
ஆனால், சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷை குல்தீப்யாதவ் காலி செய்தார். அவரது சுழலில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்ட மிட்செல் மார்ஷ் அவுட்டானார். அவர் 84 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்ஸருடன் 96 ரன்கள் எடுத்தார். அவர ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித் – லபுஷேனே ஜோடி சிறப்பாக ஆடினர். நிதானமாக ஆடிய ஸ்மித் அரைசதம் விளாசினார். அவர் அதிரடிக்கு மாற முயற்சித்த நேரத்தில் சிராஜ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்தார்.
அதன்பின்பு, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களது வேகம், சுழலில் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் கட்டுக்குள் வந்தது. அலெக்ஸ் கேரி 11 ரன்களில் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 5 ரன்களில் போல்டானார். கிரீன் அதிரடியாக ஆட முயற்சித்த 9 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கினார். விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் கட்டுக்குள் வந்தாலும் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்தது.
353 ரன்கள் டார்கெட்:
சிறப்பாக ஆடிய லபுஷேனே அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய பிறகு லபுஷேனே அதிரடியாக ஆட முயற்சித்தார். அவருக்கு கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு அளித்தார். கடைசியில் லபுஷேனே 58 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் அவுட்டானார். கடைசியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அவர்கள் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தனர்.
பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அவர் 81 ரன்களை வாரி வழங்கினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பிரசித்கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் எடுபடவில்லை என்றே கூற வேண்டும். வாஷிங்டன் சுந்தர் கட்டுக்கோப்பாக வீசினார். அவர் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்காவிட்டால் வெறும் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
மேலும் படிக்க: ODI Worldcup Records: கிரிக்கெட் உலகக்கோப்பையில் கத்துக்குட்டிகளிடம் உதை வாங்கிய ஜாம்பவான்கள்.. டாப் 5 சம்பவங்கள்
மேலும் படிக்க: Asian Games 2023: ‘இதுக்கு மேல அடிக்க முடியாதுடா’ .. மங்கோலியாவை பொளந்து ரன் மழை பொழிந்த நேபாளம்..!