கே.எல்.ராகுல் சிறந்த வீரர். மிடில் ஆர்டரில் பேட் செய்யும் வீரர்களை பரிசீலித்து வருகிறோம் என்று பிசிசிஐ தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை 2024:


டி20 உலகக்கோப்பை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் சில ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பலரும் இது சிறந்த அணி தான் என்று தெரிவித்துள்ளனர். ரிங்கு சிங், சுப்மான் கில் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் காத்திருப்பு பட்டியலில் தற்போது உள்ளனர். ரோகித் சர்மா தலைமையில் மூத்த வீரர் விராட் கோலியும் அணியில் இடம்பெற்றுள்ளார்.


இது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்:


இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் மும்பையில் இன்று (மே2) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரோகித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் தாங்கள் கேப்டனாக இருந்தீர்கள் ஆனால் இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, “இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இதற்கு முன்பும் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளேன். ஒரு சில நேரங்களில் நான் கேப்டனாக இருந்ததில்லை. ஆனால் நான் இப்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறேன். இங்கு எல்லாம் நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்காது. இது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பகுதி தான். ஒரு வீரராக அந்த அணிக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய நான் எப்போதும் முயற்சி செய்வேன்என்று கூறியுள்ளார்


அஜித் அகர்கர் பேசுகையில்,” ரோகித் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பைக்கும் இந்த (டி20) உலகக் கோப்பைக்கும் இடைப்பட்ட ஆறு மாதங்களில் நாங்கள் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஹர்திக் சில டி20 தொடர்களில் தலைமை வகித்துள்ளார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரோகித் சர்மா அற்புதமாக விளையாடினார்.” என்றார். அப்போது அவரிடம் கே.எல்.ராகுலுக்கு ஏன் அணியில் இடம் இல்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “கே.எல்.ராகுல் சிறந்த வீரர். அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். எங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் தேவை. அதனால் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளோம். சஞ்சு சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் விளையாடுவார்" என்று கூறியுள்ளார்.