ஒரு சிலரை மகிழ்விப்பதற்காக இந்த தேர்வை செய்து ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கிவிட்டீர்கள் என்று பிசிசிஐ சாடியுள்ளார் கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த்.


 


டி20 உலகக் கோப்பை 2024:


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ (ஏப்ரல் 30) அறிவித்தது. இதில் இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவரை மாற்று வீரராக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த ஐ.பி.எல் லீக்கில் அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஃபினிஷராக இரண்டு மாதங்கள் முன்பு வரை சர்வதேச போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்த ரிங்கு சிங் நீக்கப்பட்டு இருக்கிறார். 26 வயதான ரிங்கு சிங் இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 89 சராசரி மற்றும் 176.23 ஸ்ட்ரைக் ரேட்டில் 356 ரன்கள் எடுத்துள்ளார். ஆனாலும் அவர் அணியில் இல்லாததை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.


ரிங்குவை பலிகடா ஆக்கிவிட்டீர்கள்:


இது தொடர்பாக பேசிய கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த், “ரிங்கு சிங் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் மேட்ச் வின்னிங் நாக்ஸை விளையாடியவர் . ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் சர்மா சதம் அடித்தாரே அந்த போட்டி நினைவிருக்கிறதா? அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. பின்னர் அங்கிருந்து தான் இந்திய அணி போட்டி முடிவில் 212 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் ரிங்கு சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


அவர் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது எல்லாம் தனது திறமை முழுவதையும் கொடுக்கிறார். இப்போது பிசிசிஐ தேர்ந்தெடுத்தது குப்பைத் தேர்வு. இந்திய அணியின் ஏன் 4 ஸ்பின்னர்கள் தேவை? அவர்கள் அனைவரும் செல்ல வேண்டுமா? ஒரு சிலரை மகிழ்விப்பதற்காக இந்த தேர்வை செய்து ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கிவிட்டீர்கள். என்னுடைய பார்வையில் ரிங்கு சிங் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும்என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.


 


இந்திய டி20 அணி வீரர்கள்:


ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.