சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட்டின் ஐகானில் ஒருவர் என்றால் மிகையாகாது. அதிரடி பேட்டிங் மற்றும் சிறந்த பீல்டிங்கிற்கு மிகவும் பெயர் போனவர். ஒரு காலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என்ற அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் இன்று, ஐபிஎல் 2024ல் வர்ணனை செய்துகொண்டு இருக்கிறார்.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி எம்.எஸ்.தோனி, அனைத்து விதமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அடுத்த சில நிமிடங்களில், தானும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார் ரெய்னா.
இந்தநிலையில், இந்த நாளில் சுரேஷ் ரெய்னா டி20யில் செய்த சம்பவம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
2019 டி20 உலகக் கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 101 ரன்கள் குவித்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைத்தார் ரெய்னா.
ரெய்னாவின் இந்த சிறப்பான இன்னிங்ஸால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ரெய்னா, சதம் அடித்து எதிரணி வீரர்களை திணற வைத்தார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் ஜாக் காலிஸ் 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை சந்தித்தது.
சுரேஷ் ரெய்னாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர். 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையில் இவரது பங்கை எவராலும் மறக்க முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதியிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியிலும் இவரது பங்களிப்பாலே இந்திய அணி வெற்றி பெற்றது என்றே சொல்லலாம். சுரேஷ் ரெய்னா தனது சர்வதேச வாழ்க்கையில் 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 31 இன்னிங்ஸ்களில் 26.48 சராசரியில் 1 சதம் மற்றும் 7 அரை சதங்கள் உள்பட 768 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, 194 ஒருநாள் இன்னிங்ஸ்களில், ரெய்னா 35.31 சராசரியில் 5 சதங்கள் மற்றும் 36 அரை சதங்கள் உள்பட 5615 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 78 டி20 சர்வதேசப் போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் ரெய்னா 134.87 ஸ்ட்ரைக் ரேட்டில் 1 சதம் மற்றும் 5 அரை சதங்கள் உள்பட 1605 ரன்கள் எடுத்தார்.