இந்த உலகக் கோப்பை தொடரில் 5 வது முறையாக அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும், மூன்று முறை சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 19) நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் இந்த போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், 7 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அரைசதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா:
சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்த நேரத்தில் விராட் கோலி களம் இறங்கினார். மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். 2 சிக்ஸர்களை அதிரடியாக பறக்கவிட்ட அவர் 31 பந்துகள் களத்தில் நின்று 4 பவுண்டரிகள் விளாசி 47 ரன்கள் எடுத்தார். 3 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார்.
5-வது முறை:
இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா 5வது முறையாக அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். முன்னதாக, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 17-வது லீக் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அந்த போட்டியில் மொத்தம் 40 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் என மொத்தம் 48 ரன்கள் எடுத்து அரைசதத்தை தவறவிட்டார்.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 21 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் 40 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்கள் எடுத்தார். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.
இதில் அதிரடியாக விளையாடி ரோகித் சர்மா 24 பந்துகள் களத்தில் நின்று 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என மொத்தம் 40 ரன்கள் எடுத்து மூன்றாவது முறையாக அரைசதத்தை தவறவிட்டார். அதேபோல், கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடியது இந்திய அணி. இந்த போட்டியில் 4 சிக்ஸர்கள் , 4 பவுண்டரிகள் என மொத்தம் 47 ரன்கள் எடுத்தார்.
இச்சூழலில் தான், இன்று (நவம்பர் 19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். இவ்வாறாக இந்த உலகக் கோப்பை தொடரில் மட்டும் 5- முறை அரைசதம் அடிக்கும் வாய்ப்பை ரோகித் சர்மா தவறவிட்டுள்ளார். அதேபோல் மூன்று முறை சதம் அடிக்கும் வாய்ப்பையும் ரோகித் சர்மா தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: நிதான ஆட்டத்தில் கோலி - கே.எல். ராகுல் கூட்டணி; 7 பந்து வீச்சாளர்களைக் கொண்டு நெருக்கடி கொடுக்கும் ஆஸீ
மேலும் படிக்க: Watch Video: காதை கிழிக்கும் சத்தம்...! வானத்தில் விமான சாகசம்...! உற்சாகத்தில் உலகக்கோப்பை கிரவுண்ட்