இரண்டு முறை உலகக் சாம்பியனான இந்தியாவும், ஐந்து முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இன்று உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியானது இன்று மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. 


ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது இது நான்காவது முறையாகும், அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்கு இது எட்டாவது முறையாகும். ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மொத்தம் 13 முறை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது, ஆஸிஸ் 8 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், கடைசியாக 2023ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகக் கோப்பையின் லீக் போட்டியில், கடைசி இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து அதன் காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்தநிலையில், ஆஸ்திரேலியா அந்த வரலாற்றை மீண்டும் செய்யுமா அல்லது மூன்றாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் எழுதுவது இந்தியாவா என்பதைச் சொல்ல வேண்டிய நேரம் இது. 


ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதிய நிகழ்வுகளை முழுமையாக பார்க்கலாம்..


1983, போட்டி 11, புருடென்ஷியல் உலகக் கோப்பை, நாட்டிங்ஹாம்: 


ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை சந்தித்த இந்திய அணி 162 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டிரெவர் சேப்பல் 131 பந்துகளில் 110 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 321 ரன்கள் இலக்காக கொடுத்தது. அந்த இன்னிங்சில் கபில்தேவ் சதம் அடித்த போதிலும், மற்ற வீரர்கள் சொதப்ப இந்திய அணி 158 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் கென் மேக்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 


1983, போட்டி 23, புருடென்ஷியல் உலகக் கோப்பை, செம்ஸ்ஃபோர்ட்:


அதே உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா பழிவாங்கியது. இந்திய அணி 55.5 ஓவரில்  247 ரன்கள் எடுத்து 248 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஷ்பால் ஷர்மா 40 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஃப் தாம்சன், ரோட்னி ஹாக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இந்தியா சார்பில் ரோஜர் பின்னி மற்றும் மதன் லால் 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 129 ரன்களுக்குள் சுருண்டது. இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீச்ஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.


1987, போட்டி 3, ரிலையன்ஸ் உலகக் கோப்பை, சென்னை:


ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜெஃப் மார்ஷ் 141 பந்தில் 110 ரன்கள் எடுத்திருந்தார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தலா 70 ரன்கள் எடுத்த போதிலும் இந்தியா 49.5 ஓவர்களில் 269 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கிரேக் மெக்டெர்மாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 


1987, போட்டி 15, ரிலையன்ஸ் உலகக் கோப்பை, டெல்லி:


1987 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். இதில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 289 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சுனில் கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து, திலீப் வெங்சர்க்கார், முகமது அசாருதீன் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 233 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவில் டேவிட் பூன் 59 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது அசாருதீன் மற்றும் மனிந்தர் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


1992, போட்டி 12, பென்சன் & ஹெட்ஜஸ் உலகக் கோப்பை, பிரிஸ்பேன்:


மழையால் ஆட்டம் கெடுக்கப்பட்டது போட்டியை மட்டுமல்ல, மாற்றியமைக்கப்பட்ட இலக்காக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகளையும் கெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை 236 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் டீன் ஜோன்ஸ் 108 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் கபில்தேவ், மனோஜ் பிரபாகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 237 ரன்களை இலக்காக இந்திய அணி துரத்தியபோது 16.2 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. DRS ன் விதிப்படி 47 ஓவர்களில் 236 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு 4 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன் அவுட்களால் இந்தியா ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது அசாருதீன் 102 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார்.


1996, போட்டி 19, வில்ஸ் உலகக் கோப்பை, மும்பை:


இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் மிகவும் பரபரப்பான ஒன்றாக இந்தப் போட்டியை கருதலாம். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மார்க் வாக் 135 பந்துகளில் 126 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய தரப்பில் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் வெங்கடபதி ராஜூ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


சச்சின் டெண்டுல்கர் 84 பந்துகளில் 90 ரன்களும், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 91 பந்துகளில் 62 ரன்களும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இந்திய அணி 48 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா சார்பில் டேமியன் பிளெமிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஸ்திரேலியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


1999, 1வது சூப்பர், ஐசிசி உலகக் கோப்பை, ஓவல்: 


இந்த உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலிய ஆதிக்கம் தொடர்ந்தது. இந்தியாவை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மார்க் வாவின் அபாரமான 83 ரன்களால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 283 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.


இந்திய அணி தொடக்க பேட்ஸ்மேன்களால் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அதன் பிறகு, அஜய் ஜடேஜா 138 பந்துகளில் 100 ரன்களும், ராபின் சிங் 94 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை அளித்தனர். இருப்பினும், இந்திய அணி 48.2 ஓவரில் 205 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கிளென் மெக்ராத் 3 விக்கெட்டுகளையும், டேமியன் பிளெமிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


2003, போட்டி 11, ஐசிசி உலகக் கோப்பை, செஞ்சுரியன்: 


 டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 41.4 ஓவர்களில் 125 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் பிரட் லீ, ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான மேத்யூ ஹெய்டன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரின் அதிரடி பேட்டிங் விளைவால், 166 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.


2003, இறுதி, ஐசிசி உலகக் கோப்பை, ஜோகன்னஸ்பர்க்:


இந்த போட்டி எந்தவொரு இந்திய ரசிகராலும் மறக்க முடியாது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படிம் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 359 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 140 ரன்களும், டேமியன் மார்ட்டின் 84 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அசத்தினர்.


விரேந்திர சேவாக் 81 பந்துகளில் 82 ரன்களும், ராகுல் டிராவிட் 57 பந்துகளில் 47 ரன்களும் எடுத்த போதிலும், இந்தியா 234 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. பிரட் லீ மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலியா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.


2011, 2வது காலிறுதி, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, அகமதாபாத்:


2011 காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பழிவாங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருந்தார். 


அடுத்து பேட்டிங்கில் இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் தலா அரை சதங்கள் அடிக்க, இந்தியா 47.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 


இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தனது இரண்டாவது ஒருநாள் உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்றியது. 


2015, 2வது அரையிறுதி, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, சிட்னி:


இந்த உலகக் கோப்பையில் 2011 காலிறுதியில் இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா பழிவாங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் 93 பந்துகளில் 105 ரன்களும், ஆரோன் ஃபின்ச் 116 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த இந்தியா 46.5 ஓவரில் 233 ரன்களுக்குள் சுருண்டது. அந்த போட்டியில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக எம்எஸ் தோனி 65 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.


அவுஸ்திரேலியா தரப்பில் ஜேம்ஸ் பால்க்னர் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஜான்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து ஆஸ்திரேலியா தனது ஐந்தாவது ஒருநாள் உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்றியது.


2019, போட்டி 14, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, ஓவல்:


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 352 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்களும், விராட் கோலி 77 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்ததாக, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தால் ஆஸ்திரேலிய அணியை 316 ரன்களுக்குள் சுருண்டது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


2023, 5வது போட்டி, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை: 


டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் 52 பந்துகளில் 41 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 71 பந்துகளில் 46 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


அடுத்த பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அப்போது கே.எல். ராகுல் 115 பந்துகளில் 97 ரன்களும், விராட் கோலி 116 பந்துகளில் 85 ரன்களும் எடுக்க, இந்தியா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை 2023ல் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.