சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை போல், நடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


இந்திய அனியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, பேட்டிங் செய்யும் போதும், களத்திலும் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார். தனது ஆக்ரோஷமான பாணியால் எதிரணி வீரர்களை கலங்கடித்து இந்திய அணியை எத்தனையோ போட்டிகளில் வெற்றிபாதைக்கு அழைத்த் சென்றுள்ளார். 


எதிரணி வீரரின் விக்கெட்கள் விழும்போது, அந்த விக்கெட்டை எடுத்த பந்துவீச்சாளரை விட கோலியின் ஆக்ரோஷமான மகிழ்ச்சியின் வெளிப்பாடு எப்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் அடிக்கும். இதை எந்தவொரு ரசிகர்களாலும் வெறுக்க முடியாது. 


இந்திய அணி விளையாடும்போதும், இந்திய அணி களமிறங்கும் போதும், மைதானத்தில் தனது வேடிக்கையான செயல்களாலும், எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதிலும், களத்தில் ஆவேசமான கொண்டாட்டங்களாலும் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பவர் கோலிதான். 


இந்தநிலையில் கடந்த ஜனவரி 23ம் தேதி ஹைதராபாத்தில் பிசிசிஐ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தற்போதைய மற்றும் ஹைதராபாத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டனர். ஜியோ சினிமா பிசிசிஐ விருதுகள் ரெட் கார்பெட் ஷோவின் போது, அணி ஒரு விக்கெட் எடுத்த பிறகு கோலி கொண்டாட்டத்தை போல் நடித்து காமியுங்கள் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் தொகுப்பாளர் கேட்டார். அதன்பிறகு, ரோஹித்தின் இமிடேட் சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்று வைரலாகியது. 






அதன்பிறகு ரோஹித் சர்மா தனது சொந்த புல் ஹாட்டில் தொடங்கி, ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு, சூர்யகுமார் யாதவின் சுபாலா ஷாட், எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட். சுப்மன் கிலின் குனியும் சைகை, கே.எல்.ராகுலின் சத கொண்டாட்டம், சச்சின் டெண்டுல்கரின் அப்பர் கட் வரை செய்து காட்டினார்.  


விருது விழாவில் ரவி சாஸ்திரிக்கு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் முகமது ஷமி, சுப்மன் கில், ரவிசந்திரன் அஷ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் பாலி உம்ரிகர் விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் விருது வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றனர்.


இந்தியா - இங்கிலாந்து, முதல் டெஸ்ட் போட்டியில் இதுவரை: 


தற்போது ஐதராபாத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு சுருட்டியது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 87 ரன்களும், கேஎல் ராகுல் 86 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களும் எடுத்தனர்.


தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்களும், அக்சார் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.