இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. பின்னர் இந்திய அணி களம் இறங்கியது.


 


இதில், இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 180 பந்துகளில் 87 ரன்களும், கே.எல்.ராகுல் 123 பந்துகளில் 86 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 436 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜோ ரூட் சிறப்பாக பந்து வீசினார். அதன்படி, 29 ஓவர்கள் வீசிய அவர் 5 ஓவர்கள் மெய்டன் செய்து 79 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல், டாம் ஹார்த்லி மற்றும் ரீகன் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.


அதிரடி காட்டும் போப்:


பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை பெற்றுக்கொடுத்தனர்.  சாக் கிராலி 33 பந்துகளில் 31 ரன்களும், பென் டக்கெட் 52 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர். இவர்களை தொடர்ந்து ஒல்லி போப் களம் இறங்கினார். அவருடன் களமிறங்கிய ஜோ ரூட் 6 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


மறுபுறம் ஒல்லி போப் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அதேநேரம் பின்னர் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன்களும், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும், பென் ஃபோக்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியாக விளையாடி வரும் ஒல்லி போப் 208 பந்துகள் களத்தில் நின்று 148 ரன்களை விளாசினார். இவ்வாறாக இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவின் படி 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை எடுத்துள்ளது. தற்போது இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.


 


மேலும் படிக்க: IND vs ENG Test: முதல் இன்னிங்ஸ்... இங்கிலாந்தை விட வலுவாக இருக்கும் இந்திய அணி... விவரம் உள்ளே!


 


மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்