Rohit Sharma: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சுமார் 2 வருட இடைவெளியிலேயே, 3 கோப்பைகளை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள மூன்றாவது இறுதிப்போட்டி ஆகும். ஐசிசி ஒருநாள் மற்றும் டி-20 உலகக் கோப்பைகளில் ரோகித் சர்மா தலைமையிலான அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளார். அதேநேரம், சுமார் 2 வருட இடைவெளியிலேயே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணமான 3 தோல்விகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
2022 டி20 உலகக் கோப்பை:
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், சூப்பர் 12 சுற்றில் 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த ரோகித் சர்மா தலைமயிலான இந்தியா வலுவான அணியாக திகழ்ந்தது. ஆனால், அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்து, மீண்டும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை:
12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் களமிறங்கிய இந்தியா, லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அரையிறுதியிலும் ரோகித் சர்மா தலைமையிலான அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
டெஸ்ட் சாம்பியன்ஸிப்:
கடந்த 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரிலும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அதிலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
ரிவெஞ்ச் மோடில் ரோகித் சர்மா:
ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டன் தான், ஆனால் முக்கிய போட்டிகளில் சொதப்புகிறார் என இணையதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் நடப்பு உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் இருந்தே இந்திய அணி வெளியேற்றியது. அதேபோன்று, அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு ரோகித் சர்மா பழிதீர்த்துள்ளார். இதேமுனைப்பில் கடந்த 2022 டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் அடைந்த தோல்விக்கு, நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்ரிக்காவை பழிவாங்கும் என நம்பப்படுகிறது.