வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன், அதிக வேகத்தில் காரை ஓட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 3 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. புனே- முன்பை விரைவு சாலையில் ரோஹித் சர்மா அதிவேகமாக காரை ஓட்டியது பதிவாகியுள்ளது. 


வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வதற்காக ரோஹித் சர்மா தனது வீடு இருக்கும் மும்பையில் இருந்து புனேவுக்கு காரில் நேற்று சென்றுள்ளார். அப்போது, ரோஹித் சர்மா தனது காரில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வேகமாக காரை ஓட்டிச் சென்றதாக போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், சில நேரத்தில் ரோஹித் சர்மாவின் வேகம் மணிக்கு 215 கி.மீ வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரோஹித் சர்மாவுக்கு ஆன்லைன் மூலம் மூன்று சலான்கள் வழங்கப்பட்டுள்ளது. 






புனே - மும்பை விரைவு சாலையில் வேக வரம்பு என்ன..? 


புனே - மும்பை விரைவு சாலையில் ஓட்டப்படும் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வரை செல்லலாம். அளவிடப்பட்ட இந்த வேகத்தை விட அதிவேகத்தில் சென்றால் எல்லா இடங்களிலும் உள்ள கேமராக்கள் பதிந்து ஆன்லைன் மூலம் ஃபைன் அனுப்பும். ரோஹித் சர்மா சொகுசு காரில் புனே சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.ஆனால், ரோஹித் போன்ற வீரருக்கு இது நல்ல உதாரணம் அல்ல. உலக கிரிக்கெட்டில் ரோஹித் சிறந்த வீரராகக் கருதப்படும் ஒருவர், இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறுவது கண்டிக்கத்தக்கது. 


இந்த தகவல் உண்மைதானா..? 


இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எதிராக ஃபைன் வழங்கியது தொடர்பாக புனே காவல்துறை எந்தவொரு சிறப்பு சலுகையும் தரவில்லை. அதிக வேகம் நம்மை மட்டும் அல்லாது, நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். இதன் காரணமாகவே புனே காவல்துறையினர் ரோஹித் சர்மாவின் பெயரில் மூன்று சலான்கள் வழங்கப்பட்டுள்ளது. 


ஞாபகம் இருக்கிறதா ரிஷப் பண்ட் விபத்து? 


டந்த ஆண்டு, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், அதிவேகமாக ஓட்டியதால் பெரும் விபத்துக்குள்ளானது. டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​ரிஷப் பந்தின் கார் டிவைடரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். பல நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது. ரிஷப்பின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது, அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் ரிஷப் வெளியேறினார்.  


உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், இந்திய அணியின் அடுத்த ஆட்டம் இன்று வங்கதேசத்துக்கு எதிராக புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 131 ரன்களில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக 86 ரன்களில் அரைசதம் விளாசினார்.