மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில்,  இந்திய அணி 288 ரன்களை குவித்துள்ளது. 


இந்திய அணி பேட்டிங்:


போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தனர். ரோகித் சர்மா  அரைசதம் கடக்க, சக வீரரான ஜெய்ஷ்வாலும் அரைசதம் விளாசினார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 139 ரன்களை குவித்து இருந்தபோது, 57 ரன்கள் சேர்த்து இருந்த ஜெய்ஷ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த சுப்மன் கில் வெறும் 10 ரன்களில் நடையை கட்டினார். பொறுப்புடன் விளையாடி வந்த ரோகித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 80 ரன்கள் குவித்து இருந்தபோது அவர் வாரிகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


கோலி அபாரம்:


அவரை தொடர்ந்து ராகானேவும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 182 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. இதையடுத்து, 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ஜடேஜா பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி அரைசதம் கடந்து அசத்தினார். இதனால், இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை சேர்த்துள்ளது. கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெமார் ரோச், கேப்ரியல், வாரிகன் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது.


100வது டெஸ்ட்:


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 21 ஆண்டுகாலமாக இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடைந்ததே இல்லை என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. இந்தியாவும், மேற்கிந்திய தீவுகளும் 1948ம் ஆண்டு முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடின. அந்த போட்டிக்கு லாலா அமர்நாத் கேப்டனாக இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜான் காட்டர்ட் கேப்டனாக இருந்தார். அந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இதுவரை ஆடிய போட்டிகளில் 46 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 23 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 30 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, இந்திய அணிக்காக விராட் கோலி விளையாடும் 500வது சர்வதேச போட்டி போட்டியாகும்.