அக்‌ஷர் படேலின் உடற்தகுதி இன்னும் உறுதியாகாத நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகிறது.


உலகக்கோப்பை தொடர்:


ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் செப்டம்பர் 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ல் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அந்த பட்டியலை இறுதி செய்வதற்கு செப்டம்பர் 28 (இன்று) தான் கடைசி தேதி ஆகும். இந்த நிலையில், இந்திய அணியில் ஒரு சிறு மற்றும் முக்கிய மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


அறிவிக்கப்பட்ட இந்திய அணி: 


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். அதில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


உடற்தகுதியை நிரூபித்த வீரர்கள்:


மேற்குறிபிட்ட வீரர்களில் ஸ்ரேயாஷ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயத்தில் இருந்து அண்மையில் தான் மீண்டு வந்தனர். இருப்பினும், ஆசியக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், இருவரும் தங்களது உடற்தகுதியை நிரூபித்துவிட்டனர். இது இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது.


அக்‌ஷர் படேல் காயம்:


அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல் இடம்பெற்றார். ஆனால், ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் அக்‌ஷருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்பட்டார்.


மீண்டும் வருகிறாரா அஷ்வின்?


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய அஷ்வின், கடும் நெருக்கடி கொடுத்ததோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அணியில் சிறப்பாக செயல்படுவது, அதிகப்படியான அனுபவம் ஆகியவை இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அக்‌ஷர் படேல் முழு உடற்தகுதி பெறாவிட்டால், அவருக்கு பதிலாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஷ்வின் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிரது. இதுதொடர்பான அறிவிப்பை, இந்திய கிர்க்கெட் அணியின் தேர்வுக் குழு தலவரான அஜித் அகர்கர் இன்று பிற்பகலுக்கு பிறகு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு தமிழர் கூட இல்லாத நிலையில், அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.